31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊரகக் கடன்கள், சிறுகடன்கள், மகளிர்கடன்கள், மாணவர்கடன்கள், என எளிய பொது மக்களோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ள இரண்டு வங்கிகள், முடிந்த நிதியாண்டில், இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடியையும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியையும் வருவாயாகப் பெற்றுள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் ஜாம்பவான்களுக்கு மட்டும் கடன் கொடுங்கல் வாங்கல் செய்யும், கடனே கொடுக்காமல் இருப்பு வைத்திருக்கும் இந்தியாவின் 19 பொதுத் துறை வங்கிகள் நட்டத்தை சந்தித்துள்ளன. இந்த வங்கிகள் முடிந்த நிதியாண்டில் ரூ.87,357 கோடி நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடியின் கைவரிசையால் ரூ.12 ஆயிரத்து 283 கோடி நட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய மாநில வங்கியின் நிகர இழப்பு ரூ.6,547.45 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு குறைந்த பட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் பெற்ற அபராதத் தொகை மூலமாகவே இந்த வங்கி பெரும் லாபம் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு பெரும் நட்டத்தை அந்த வங்கி சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்திய மாநில வங்கி ரூ.10 ஆயிரத்து 484.10 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்திய பொதுத் துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் ரூ.85,370 கோடியாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கியின் வருவாய் இழப்பு ரூ.8,237.93 கோடியாக உயர்ந்துள்ளது. நலிந்து வருவதாக இந்திய வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் சீரமைப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வங்கிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டுக்கு வாராக்கடன், செயல்படா சொத்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு வரை இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ.8.31 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டு அரசு வங்கிகளின் வாராக்கடன் ரூ.8லட்சம் கோடியாகும். எளிய பொதுமக்களோடு அதிக தொடர்பு கொண்டு வாராகடன்களுக்காக, மக்கள் அறங்கூற்றுமன்றம் மூலமாக மாற்றுமுறைத் தீர்வை நாடுவது, செயற்படா சொத்து மதிப்பை மிகவும் குறைத்துக் கொள்வது என்று வங்கியை வங்கியாக நடத்தும் வங்கிகளான இந்தியன் வங்கியும், விஜய வங்கியும் இலாபம் ஈட்டியிருப்பதை அரசு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வங்கிகளின் அதிகாரிகளின் அனுபவத்தை மற்ற வங்கிகளுக்கும் பகிர்ந்து கொள்வது 19 பொதுத் துறை வங்கிகளையும் இலாபமாக எடுத்துச் செல்வதற்கான வழிமுறையாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,818.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



