Show all

வழக்கு ரத்து! பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் நடந்த போராட்டம்; மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி திருவரங்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் உணவகம் செயல்படுகிறது. இந்தக் கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக 112 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 112 பேரும் உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு பதிகை செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து அறங்கூற்றுவர் ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

கடைகளுக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் 19(1) (ஏ) மற்றும் 19 (1) (ஜி) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.

இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால். இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை.

மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை என குறிப்பிட்ட சமூகங்கள், சாதிகளை குறிப்பிடும் வகையில் பல உணவகங்கள் உள்ளன. சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் அடுமனைகள் காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன். இதனால் சாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை.

மனுதாரர்கள் பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறங்கூற்றுவர் உத்தரவில் கூறியுள்ளார்.

நம்ப சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் பெயரில் சாப்பாட்டுக் கடை ஒன்று தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றது.

'தம்பி பிரபாகரன் உணவகம்' என்பது இதன் பெயர். விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் தேசியத் தலைவர் பிரபாகரன் உணவகத்தின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார். உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.

சாதிய இன உணர்வுகள் ஆபத்தானவைகள் அல்ல் சாதிய இன ஆதிக்கம்தான் பிழையானவை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,818.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.