Show all

வேண்டவே வேண்டாம்! இந்தியத் தலைமை அமைச்சர் என்ற தலைப்பில் மலிவான கருத்துப் பரப்புதல்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்டவரோ நல்லவரோ, மக்களுக்கு வேதனைகளை மட்டுமே பரிசிலாகத் தந்தவரோ இல்லை அப்படி இப்படி கட்சியினர் அடைந்த பயனில் இறைந்த பருக்கைகளால் மக்கள் துளியேனும் நன்மை அடைந்தனரோ... எப்படியிருந்த போதும் இந்தியத் தலைமை அமைச்சர் என்று வந்து விட்ட பிறகு அவரைப் பாதுகாக்க வேண்டியது இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழி பேசும், அனைத்து இன, அனைத்து கலாச்சார மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே காவல்துறையினர், பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று ஐந்து பேரை அண்மையில்; கைது செய்தனர். அவர்களின் மின்அஞ்சல் முகவரிகளை ஆய்வு செய்ததில், ஒரு மின் அஞ்சலில், பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளதான தகவலைக் கண்டு பிடித்ததாக தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் ஒரேநாளில், ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும், அதில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்ததாகவும் காவல்துறை  தெரிவித்ததாக மாற்றிக் கொண்டார்கள். கருத்துப்பரப்புதலுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றமா தெரியவில்லை.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா கூறுகையில், இந்திய தலைமை அமைச்சர் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என காவல்துறையினர் கூறுகின்றனர். நடுவண் அமைச்சர் அத்வாலேவோ அவர்களை தலித்துகள் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் என செய்திகள் பரப்பப்படும். இது மோடியின் இத்துப் போன பழைய தந்திரம் என்றார்.

மொத்தத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் தலைப்பில் மலிவான கருத்துப் பரப்புதலில் ஈடுபடுவது அருவருப்பான செயலே. பாஜகவினர் இதை உணர வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.