Show all

சுங்கக் கட்டண வசூல்! இனி உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்

தற்போதைய நிலையில் சுங்கக் கட்டணத்தை தொகையாகவும், பாஸ்டேக் மூலமாகவும் செலுத்த முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கக் கட்டண வசூல், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடுமாம். 

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான கட்டண வசூலானது- புவியிடங்காட்டி (Global Positioning System) முறையில், வண்டி உடைமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப் படும். 

இந்தத் தகவலை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று தெரிவித்தார். இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அரசு தற்போது இறுதி செய்துள்ளது. ரஷ்ய அரசுடன் இணைந்து இந்தப் புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. தற்போதைய நிலையில் அனைத்து வணிக வாகனங்களும் ‘புவியிடங்காட்டி’ (ஜிபிஎஸ்) அமைப்புகளுடன் வருகின்றன. அதே சமயம் பழைய வாகனங்களில் ‘புவியிடங்காட்டி’ (ஜிபிஎஸ்) தொழில்நுட்பத்தை பதிப்பு செய்வதற்கு அரசு புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வரும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். வணிக வாகனங்கள் மட்டுமல்லாது பயணிகள் வாகனங்களும் புவியிடங்காட்டியுடன் தான் வருகின்றன. எனவே பழைய வாகனங்களில் ‘புவியிடங்காட்டி’ (ஜிபிடிஎஸ்) அமைப்புகளை பொருத்துவதற்கும் அரசு வழியை கண்டறியவுள்ளது. 

இதனால் இந்தியா வெங்கும் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட்டு விடும். வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் நேரடியாகவே கழிக்கப்பட்டு விடும் எனவும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய நிலையில் சுங்க கட்டணத்தை தொகையாகவும், பாஸ்டேக் மூலமாகவும் செலுத்த முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.