Show all

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும். 

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது மக்களுக்கு நடுவே பிரபலமான ஒன்று என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் முடிவு எடுத்துள்ளோம். இணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது. மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தீபாவளி அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கி அன்று இரவு பனிரெண்டு மணி வரை கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. வசதி படைத்தவர்கள் முதல் நாள் இரவிலிருந்தே வெடிக்கத் தொடங்கி விடுவார்கள். இதில் இந்தத் தீர்ப்பு எந்த வகையில் சேர்த்தி என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. இந்தத் தீர்ப்பின் சாதக பாதகங்கள் என்னவாக இருந்தது என்பதை தீபாவளிக்கு மறுநாள் தான் தெரிந்து கொள்ள முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.