06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உண்மையான அறங்கூற்று மன்றம் திரைப்படத்தில் காண்பதைப் போலெல்லாம் இருக்காது. அறங்கூற்றுவர் ஒரு சர்வாதிகார அரசரைப் போல மதிக்கப் படுவார். வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட குனிந்து பணிந்துதான் உள்ளே வருவார்கள் ; வெளியே செல்வார்கள். எல்லோருடைய செல்பேசியும் அதிர்வு செயல்வகையில் தான் வைக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருக்கிற நமது வழக்கறிஞருக்கு நாம் பேசியில் அழைத்தால், வெளியில் வந்து தான், ஒதுக்குப் புறமாக நம்மை அழைத்துச் சென்று பேசுவார். வெறுமனே ஏதாவது ஒரு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர், மருத்துவ அதிகாரி, காவல்துறை அதிகாரி, குற்றவாளிகள், ஆகிய அனைவரும் அறங்கூற்று மன்றத்திற்கு வெளியே வெட்ட வெளியில்தான் நிற்பார்கள். இது வெள்ளைக்காரன் காலந்தொட்டு அறங்கூற்று மன்ற நடைமுறையாக தொடர்ந்து இருந்து வருகிறது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்;கறிஞர்களுடன் இருக்கைக்காக வாக்குவாதம் செய்தது சர்ச்சையாகக் கருதப்பட்டது. கடந்த மாதம் எச்.ராஜா அறங்கூற்றுமன்றத்தை திட்டியதற்காக மன்னிப்பு கேட்க சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்திற்கு காலையிலேயே வந்தார். எச்.ராஜாவின் வழக்கு நேற்று காலை 11 மணிக்குத்தான் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எச்.ராஜா முன்னதாகவே வந்து 9 மணிக்கே அறங்கூற்று மன்றத்தில் அணியமாகி விட்டார். மிகவும் குறைந்த அளவிலான பாஜகவினரே அவருடன் வந்திருந்தனர். முதன்மைப் பிரமுகர்கள் யாரும் வரவில்லை. 9 மணிக்கே வந்தவர் 2 மணி நேரம் காத்திருந்துள்ளார். அவர் நேரடியாக அறங்கூற்றுமன்ற அவையில், அறங்கூற்றுவர் அவைக்கு வருவதற்கு முன்னதாக, வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். வழக்கறிஞர்கள் இருக்கையில் அமர்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்த அங்கிருந்த வழக்கறிஞர்கள் கோபத்திற்கு உள்ளானார்கள். வேகமாக சென்று எச்.ராஜாவுடன் வாக்குவாதம் செய்தனர். 5 நிமிடம் வரை இந்த வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து வழக்;கறிஞர்கள் பலர் அங்கு கூடியதால் எச்.ராஜா அந்த இடத்தை விட்டு எழுந்து, வெளியில் வந்து விட்டார். அவருக்காக அழைப்பு வந்ததும் உள்ளே சென்று அறங்கூற்று மன்றத்தை அவமதித்ததாகத் தொடரப் பட்ட வழக்கில், மன்னிப்பு கேட்டார் ; பெற்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



