Show all

செயலலிதாவின் புதிய சிலை வடிக்கப்பட்டு விட்டது! பழைய சிலைக்கு புதிய சிலை தேவலாம்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முதல்வர் செயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் செயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒப்புதல் வழங்கிய நிலையில் சிலையின் இறுதிகட்ட வடிவமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இந்த சிலை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய சிலைக்கான புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிலை இப்போது சாக்குப்பையில் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக திறக்கப்பட்ட செயலலிதாவின் சிலையைப் பார்த்தால் அவரை மாதிரியே தெரியவில்லை என்ற விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து புதிய சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த சிலையும் கூட அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள எம்ஜிஆர் சிலை எம்ஜியாரைப் பிரதிபலிக்கும் அளவுக்கு, செயலலிதாவை பிரதிபலிக்கும் வகையில், தத்ரூபமாக இல்லை. செயலலிதாவின் முழு உருவ சிலை இதுவாகும். எனவே செயலலிதாவின் உடல் பருமன் சிலையிலும் பிரதிபலிக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்தச் சிலையோ, சற்று ஒல்லியாக உள்ளது. நெற்றி பகுதியும் உள்ளடங்கி உள்ளது. செயலலிதா நின்று பார்க்கும்போது இருக்கும் கம்பீரத்தை இந்த சிலையில் வடிவமைக்க முடியவில்லை. சிலை கண் பகுதியில் கம்பீரம் இல்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. 

மீண்டும் சிலை வடிவமைப்பில் மெத்தனம் நடந்துள்ளதா, அல்லது, செயலலிதா சிலையை வடிவமைக்கும் திறமையுள்ள சிற்பிகள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.