Show all

விடிந்தால் தீபாவளி! ஏன், எதற்கு, எப்படி வந்தது தீபாவளி?

கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழகத்தில் தீபாவளியும் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரவிட இயக்கத் தோற்றத்திற்கு பிறகு தீபாவளிக்கான புராணக் கதையின் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப் பட்டு அந்தப் புராணக் கதை அறிந்தவர்கள் நடுவே தீபாவளிக் கொண்டாட்டம் மங்கி வருகிறது.

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில், அதாவது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அக்கால ஆட்சியாளர்களால் நுழைக்கப் பட்டது தீபாவளி.  

அப்போது இந்தத் தீபவளிக்கு சொல்லப் பட்ட ஆரியத் தொல்கதை விளக்கம்:
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று பூமியை மீட்டு வந்து விரித்தார்.
3. பூமிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.  
4. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
5. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் தொடங்கினார்.
6. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
7. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
8. நரகாசுரன் இறந்ததற்கான மகிழ்சிக்கான விழாவாக தீபாவளி பண்டிகை வட இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. நாமும் கொண்டாடுவோம் என்று காரணம் சொல்லப் பட்டது.

இறப்பை கொண்டாடுவது தமிழர் வழக்கம் இல்லாத நிலையில் பெரும்பாலான கிராமங்களில் தீபாவளி கொண்டாடப் படுவதில்லை.

ஈரோடு அருகில் வெள்ளோடு, வேடந்தாங்கல் உள்ளிட்ட பறவைகள் சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள், பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை தடை செய்து, பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

திரவிட இயக்கத்தவர்கள், தனித்தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் சார்ந்தவர்கள் இல்லங்களில் தீபாவளி கொண்டாடப் படுவதில்லை.

நகரப் பகுதிகளில் தீபாவளி கொண்டாடுகிற தமிழர்களும்: கிறுத்துவர்களின் கிறுத்துமஸ் போலவும், முகமதியர்களின் இரம்சான் போலவும் நட்புறவுத் திருவிழாவாகவே தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். 

தீபாவளிக்கான புராணக் கதையறிந்த தமிழர்கள் யாரும் தீபாவளி கொண்டாடத் தயங்குவதால், தற்போது பார்ப்பனியர்கள்- தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் நாள் என்று தீபாவளிக்கு புது விளக்கம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஐப்பசி அமாவாசைக்கு முந்தைய நாள் சதுர்த்தசி திதி அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்றுதான் நரகசூரன் வதம் செய்யப்பட்ட நாள். 

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழவேண்டும். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். தீபாவளி அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக தொல்கதை (புராணம்) விளக்கம் அளிக்கிறதாம்.

அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகமாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,317.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.