ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் எண்ணெய் இயற்கை எரிவாயுக் கழகத்தின் கருவியுடன் 90 அடிக்கு புதிய குழி தோண்டும் பணி. ஆனால் தற்போது குழந்தையோ 100 அடிக்கு கீழே சென்றுள்ளான். பரபரப்பில் மீட்பு பணிக் குழுவினர். சோகத்தில் பெற்றோரும் பொது மக்களும். 09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இருபத்தைந்து மணி நேரத்தைக் கடந்து, திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 அகவை குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடுக்காட்டுப்பட்டி ஆழ்த்துளை கிணற்றில் 85 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் சுர்ஜித் 100 அடிக்கு கீழே சென்றுள்ளதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய மீட்பு படையினரோடு நெய்வேலி நிலக்கரி நிறுவனக் குழுவும் தற்போது இணைந்து முயற்சித்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி குழிக்கு அருகாமையில் 90 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டவுடன், 75 அடியின் பக்கவாட்டிலிருந்து குழந்தை மீட்கப்படும் என்று தெரிய வருகிறது. ஆனால் குழந்தை தற்போது 100 அடி ஆழத்திற்கு சென்றுள்ளதால், தாமதப்படுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். ஏற்கெனவே குழந்தையின் தலைக்கு மேல் 2 அங்குல உயரத்திற்கு மணல் மூடியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இன்று காலை முதலே குழந்தையிடம் இருந்து எந்த அசைவுகளும் இல்லாத நிலையில், மயங்கி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருபத்தி ஏழு அடி ஆழத்தில் இருந்த குழந்தை, மீட்புப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது 100அடி ஆழம் வரை, வழுக்கிக் கொண்டே இருப்பதால், மீட்பு முயற்சியில் ஈடுபடத் தொடங்கும்பேதே குழந்தைக்கு கீழாகச் சென்று விரியும் பலூன் வடிவமைப்பை உருவாக்குகிற தொழில் நுட்ப முறை ஏதும் பின்பற்றப் படுவதில்லையா என்று ஊர்திகள் துறை வல்லுநர்களிடம் கேள்வி எழுகிறது. தற்போது கார்களில் விபத்தில் விரியும் காற்றுப்பை இல்லாத கார்களை நடுத்தரத்திற்கு மேற்பட்ட வசதியுள்ளவர்கள் வாங்க முயலுவதே இல்லையே. அடிக்கடி நிகழும் இந்த ‘ஆழ்துளைக்கிணறு- குழந்தைகள் விபத்தை’ முன்னிட்டு தீயணைப்புத் துறைக்கு அது போன்ற கருவியை உருவாக்கித் தருவதில் என்ன சிரமம் என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். முதலுதவியாக- குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாக அறிந்தவுடனே, தீயணைப்புத் துறையினரோ, தொழில் நுட்ப வல்லுனர்களோ, கால்பந்துகளில் பயன்படுத்தப் படும் பிளாடரை, கொத்தனார்கள் பயன்படுத்தும் நீர்மட்டக் குழாயின் நுனியில் வலிமையாகக் கட்டி, ஆழ்துளைக் கிணற்றின் விழுந்துள்ள குழந்தைக்கு பக்கவாட்டில் குழந்தைக்கு கீழாக இறக்கி பந்தை ஊதிப் பெரிது படுத்தி, மேற்கொண்டு குழந்தை கீழே இறங்கி விடமால் பாதுகாக்க, குழந்தைக்கு பக்கவாட்டில் வழியிருந்தால் முயலலாம் என்று சில பெரியவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதே சமயம்:- இப்போது முதலுதவி யோசனை சொல்லி என்ன பயன்? குழந்தை சுர்ஜித்தான் நூறடிக்கு மேல், கீழறங்கி விட்டானே. இனி கடுமையான முயற்சிதான் தேவையாய் இருக்கிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்படியாவது சுர்ஜித்தை மீட்டு தர வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வருந்துகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,317.
இந்தப் பணியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனக் குழு, எண்ணெய் எரிவாயுக் கழகம், மற்றும் தீ அணைப்பு துறையும் இணைந்து 1 மீ. அகலத்திற்கு, 90 அடி ஆழம் கொண்ட குழி, ஆழ்த்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்படவுள்ளது. இந்தக் குழியை தோண்டி முடிக்க 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என தீ அணைப்பு துறையின் தமிழகத் தலைவர் காந்திராஜன் தெரிவித்திருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.