Show all

சுர்ஜித் மீட்பு: ரிக் இயந்திரம் வந்து விட்டது. பொருத்துவதில் தவிர்க்கவியலா காலதாமதம்.

சிறுவன் சுர்ஜித்தை மீட்க இறுதிமுயற்சியாக ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. அதைப் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. எதிர்பார்த்ததை விட இதை பொருத்துவதற்கு அதிக காலதாமதமாகியுள்ளது.

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுவன் சுர்ஜித்தை மீட்க இறுதிமுயற்சியாக ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. ரிக் இயந்திரத்தை இறக்க தற்காலிக மேடை அமைக்கவும், வேளாண் நிலத்தில் பாதை அமைக்கவுமாக காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. ஏழு மணியளவில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆள்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் முயற்சிகள் 36 மணி நேரம் கடந்தும் தொடர்ந்து வருகிறது.


எண்ணெய் இயற்கை எரிவாயுக் கழகத்திற்குச் சொந்தமான ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு அதிகாலை கொண்டு வரப்பட்டது. 96 டன் எடைகொண்ட இந்த இயந்திரத்தை தாங்கிவந்த கனரக வாகனம் பழுதானதால் திட்டமிட்டபடி வாகனம் 2 மணியளவில் வந்து சேரவில்லை. பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது. நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் மேலும் தாமதனாமனது.

ரிக் இயந்திரம் வந்ததும் சுமார் ஒரு மணி நேரத்தில் இயக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு கூறியிருந்தார். ஆனால் எதிர்பார்த்ததைவிட இயந்திரத்தை பொருத்தும் பணிகள் தாமதமாகிறது.

96 டன் எடையுள்ள இயந்திரத்தை இறக்குவதற்கு இயற்கையான மேடை மாதிரியான பகுதி எதுவும் இல்லாத வேளாண் நிலம் என்பதால் செயற்கையாக தற்காலிகமாக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் அந்த வேளாண் நிலத்தில் இயந்திரம் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டது.

ஆள்துளை கிணறு அமைப்பதற்காக படுக்கை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. எனவே இந்த காலதாமதம் தவிர்க்கமுடியாததாக உள்ளது. எனவே ஏழு மணியளவில் பொருத்தப்படும் பணிகள் நிறைவடைந்து ரிக் இயந்திரம் பள்ளம் தோண்டும் பணியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு 3 மீட்டர் தொலைவில் 100 முதல் 110 அடி வரை ஆழத்தில் ஒன்றரை மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டப்படவுள்ளது. இதற்கு 3 முதல் 4 மணி நேரம் ஆகும். திறமையான தீயணைப்பு வீரர்கள் கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகியோர் இறங்கி மீட்கவுள்ளனர்.

பள்ளம் தோண்டும் போது அதிர்வு காரணமாக சுர்ஜித் மேலும் கீழ்நோக்கி சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் அவனது கை பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலைக்குப் பின் அவனது சுவாசம் குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லையெனினும் தொடர்ந்து உயிர்வளி வழங்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,318.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.