மின் வாரியங்களுக்கு காத்திருக்கும் பெரும் அறைகூவல்! ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க மின்விளக்கை அணைப்பதும் ஆபத்தானது. மீண்டும் அனைத்து விளக்குகளையும் ஏற்றுவதும் அதைவிட ஆபத்தானது. என்ற நிலையில் இந்திய வரலாற்றில் இப்படி 9நிமிடங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த விளக்கும் அணைக்கப் பட்டதில்லை. 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏற்கெனவே ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தியாவின் ஒரு நாளின் மின்சாரப் பயன்பாடு 1,25,000 மெகாவாட்டாக ஆக குறைந்துள்ளது. நாளை மக்கள் செய்யவிருக்கும் 9 நிமிட விளக்கணைப்பு மேலும் சிக்கலைக் கொண்டு வரும். இந்தியாவில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள் என நமது தலைமைஅமைச்சர் மோடி அழைப்பு விடுப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் அதற்கு எதிர்வினையாக எதாவது செயலாற்றிவிடுகின்றனர் அவரது கொண்டாடிகள். அப்படிதான் கடந்த மார்ச் 22 அன்று மக்கள் ஒற்றுமையைக் காட்ட தங்கள் வீட்டுக்கு வெளியே வந்து கைதட்டுங்கள் என மோடி கூற, அதற்கு எதிர்வினையாக மக்கள் ஒருபடி மேலேயே ஆரவாரமாகச் சாலையில் நடத்திய அணிவகுப்பை மறந்திருக்க மாட்டோம். நாளை இரவு 9.00 மணியிலிருந்து 9.09 வரை ஒன்பது நிமிடங்களுக்கும் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து, மின்கலவிளக்கு அடித்து அல்லது அகல் விளக்கு ஏற்றி நம் ஒற்றுமையைக் காட்டச் சொல்லியிருக்கிறார் மோடி. இதனால், மோடியின் ஆதரவாளர்கள் ஆரவாரமாக இருந்தாலும், நடுவண் மற்றும் மாநில மின்சார வாரியங்கள் பெரும் பதட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவின் ஒரு நாளின் சராசரி மின் தேவை 1,60,000 மெகா வாட்டுகள். பொதுவாக நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கான மின்சாரத்தை வழங்கினால் மட்டுமே, நம் மின் வழங்கல் அமைப்பு நிலையாகச் செயல்படும். மிகவும் கூடுதலாகவோ குறைவாகவோ மின் பயன்பாடு இருக்கும்போது மின் வழங்கல் அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். சாதாரண நேரங்களில் அதுபோல குழப்பங்கள் நிகழாது. ஆனால், நாளை நாடு முழுவதும் அனைத்து மக்களும் மின்விளக்குகளை அணைப்பதும் சட்டென சில நிமிடங்களில் அதை மீண்டும் இணைப்பதும் மிகவும் சிக்கலானது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அளவான மின்சாரத்தை உற்பத்தி செய்து மின் வாரியம் வழங்கும். மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போதே மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டாக வேண்டும். நமது வீடுகளில் மின்கலங்களில் சில விளக்குகளுக்கு, சில மின்விசிறிகளுக்கு ஒரு பத்து மணி நேரத்திற்கு என்று மின்சாரத்தை வேதியியல் மாற்றம் செய்து வைத்துக் கொள்வது போல எல்லாம் மின்சாரத்தை சேமித்துக் கொள்ள முடியாது. மின் சக்தியைச் சேமித்து வைக்க முடியவே முடியாது. திடீரென நாட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் விளக்குகளை அணைக்கும்போது நம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி ஆகும். அந்த நேரத்தில் மின் நிலையங்கள் மின் வழங்கல் அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு மொத்தமாக நமக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. இப்படித் தடைப்பட்டிருக்கும் மின் இணைப்பை ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு திடீரென அனைவரும் ஒரு சேர உபயோகிக்கும்போது அதிகமான மின் தேவைக்கு மின்சாரத்தை வழங்க முடியாமல் மின் நிலையங்கள் செயலிழக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஏற்கெனவே ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தியாவின் ஒரு நாளின் மின்சாரப் பயன்பாடு 1,25,000 மெகா வாட்டுகளாக குறைந்துள்ளது. நாளை மக்கள் செய்யவிருக்கும் 9 நிமிட விளக்கணைப்பு மேலும் சிக்கலைக் கொண்டு வரலாம். உத்தரப்பிரதேச மாநில மின் வாரியமானது சரியாக நாளை இரவு 9.00 மணிக்கு 3000 மெகா வாட்டுகள் அளவுக்கு மின் விநியோகத்தை குறைக்கவிருப்பதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக மின் வாரியம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அனைத்து மின் பொறியாளர்களும் நாளை மாலையில் பணியில் இருக்க வேண்டும், மின் விநியோகத்தை நிலையாக வைக்க அறிவிப்புகளை முறையாக, சரியான நேரத்துக்குப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது நிமிடங்களுக்கு விளக்குகள் மட்டும் அணைக்கப்படும் என்பதால் 10,000 - 15,000 மெகா வாட்டுகள் வரை மின் பயன்பாடு குறைந்து பின்னர் கூடும் எனக் கணித்திருக்கின்றனர். எனவே, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களாகிய நாமும், வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. அது, மேலும் சிக்கலைத்தான் கொண்டு வந்து சேர்க்கும். தலைமைஅமைச்சருக்கு நம் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் விளக்குகளை மட்டும் அணைப்பது நலம். ஒன்பது நிமிடங்களிள் விளக்குகளை அணைப்பதோடு மற்ற மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும். இல்லாவிட்டால் மின் விநியோகத்தில் ஏற்படுகிற மாற்றம் காரணமாக அவை பழுதாகிவிடும் என்ற வதந்தியும் பரவி வருகிறது. அப்படி எதுவும் நிகழாது என நடுவண் மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தெருவிளக்குகள் அணைக்கப்பட வேண்டாம் என்றும் அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது! சிந்திக்காமல் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் நடுவண் ஆட்சியாளர்களை பலதுறைகள் எச்சரிக்காத நிலையில் காலை இந்திய இராணுவம் எச்சரித்திருப்பதும் பகலில் மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அணியமாக இருப்பதும் பாராட்டிற்குரியது. நன்றி நன்றி நன்றி. பணமதிப்பிழப்பில் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும், நீட்டில் சில அமைப்புகளும், ஹைட்ரோ கார்பனில் சில அமைப்புகளும், இப்படி சிந்தித்திருந்தால் நன்றாகவேயிருந்திருக்கும்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் கட்டாயத் தேவைகளைத் தவிர, மற்ற எந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் செயல்படவில்லை. அதனால், ஒரு நாளின் சராசரி மின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், இந்த விளக்கணைப்பு திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று என்பதால் அனைத்து மாநில மின் வாரியங்களும் ஓரளவுக்குத் தயார் நிலையில்தான் இருக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



