இணையத்தில் ஏராளமான விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளும் காணொளி: பீகாரில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய காவலரைப் பிடிக்க முயன்ற இளைஞர் போராட்டம் குறித்தது. 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பத்து மடங்கு உயர்த்தப் பட்ட அபராதங்களால், மேற்கு வங்காளம், இராஜஸ்தான் தவிர்த்த இந்தியா அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. டெல்லியில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்த மதன் என்பவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட, நான் ஓட்டிவந்த ஸ்கூட்டியின் விலையே 15,000 தான். அபராதமாக 23,000 கேட்கிறார்கள் எனப் பொங்கினார். ஒடிசாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 47,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, உரிமம் இல்லை, ஆவணங்கள் இல்லை எனக் கூறி இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். நீங்கள் கேட்கும் ஆவணங்கள் வீட்டில் இருக்கு. இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. சிறைக்கு அனுப்புங்க, என்னால் அபராதம் கட்ட முடியாது என காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார் அந்த ஓட்டுநர். புதிய வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர், கடந்த 8 நாள்களில் பல கோடி ரூபாய்கள் அபராதமாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பீகாரில் தலைக்கவசம் அணியாமல் வந்த காவலருக்கும் இளைஞருக்கும் இடையே நடந்த மோதல், காணொளி சமூக வலைதளத்தில் ஏராளமான விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலம் புக்சர் பகுதியைச் சேர்ந்தவர், கமல் குமார். புதிய வாகனச் சட்டத்தின்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு கமல் குமாருக்கு ரூ.11,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரோசன் குமார் என்ற காவலர்தான் இவருக்கு அபராதம் விதித்துள்ளார். வழக்கமாக இவரது குடியிருப்பைக் கடந்து செல்வதுதான் ரோசன் குமாரின் வழக்கம். மறுநாள், ரோசன் குமார் வருகைக்காக கமல் காத்திருந்தார். தலைக்கவசம் அணியாமல் வந்த காவலர் ரோசனை தடுத்துநிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கமல். இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடக்க, அதை அங்கிருந்த ஒருவர் காணொளியாக எடுத்துள்ளார். கமல்குமாரின் சட்டையைப்பிடித்து அந்தக் காவலர் இழுத்துச் செல்வதோடு, கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளார். இந்தக் காணொளி தீயானதையடுத்து, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஒட்டிய காவலர் ரோசன் குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் காணொளிகள் பல இணையத்தில் உலா வரத்தொடங்கி இருக்கின்றன. இவர்களும் அடையாளம் காணப்பட்டு, இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயவேண்டும் என்ற வேண்டுகோளோடு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,270.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



