12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்துக்கு அளித்து தனியார் நிறுவனத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து செய்யும் ஊழலுக்கு அரசு வழி வகுத்துள்ளது. ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக தலைமை அமைச்சர் மோடி மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், தனியார் முதலாளிகள் வாழ்வதற்காகச் செய்யும் சலுகைகள் மோடி அரசின் மரபணு கலாச்சாரமாகும். எப்போதும் இல்லாத வகையில் ரபேல் போர் விமான ஊழலில் ரூ.60 ஆயிரத்து 145 கோடி ஊழல் நடந்துள்ளது. அனைத்துவிதமான போர் கருவிகள் கொள்முதல் ஒப்பந்தத்தில், நாட்டை ஏமாற்றுவது என்பதுதான் மோடி அரசின் மந்திரமாகும். சதி, ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்துதல் ஆகியவை 36 ரபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்துள்ளது. போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், போர் விமானங்களைத் தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பாதுகாப்புத் துறை மூலமாகவே போர் விமானங்களைத் தயாரிக்கும் உரிமம், 'ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்' நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக எந்தவிதமான நிலமோ அல்லது கட்டிடமோ அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளில் இல்லை. 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு 14 நாட்களுக்கு முன்பாகத்தான் ரிலையன்ஸ் ஏரோஸ்டரக்சர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களின் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறப்பட்ட நிலையிலும்கூட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தணிக்கை செய்துள்ளது. பின் ஏன் இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சரும், தலைமை அமைச்சர் மோடியும் தொடர்ந்து பொய் பேசுகிறார்கள். இந்த ஒப்ந்தம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மோடி அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். அதிமுக தப்பும் தவறுமாக எதையாவது செய்து ஊழல் கட்சி போல மாட்டிக் கொள்ளும். அதற்கான எடுத்துக் காட்டு சொத்துக் குவிப்பு வழக்கு. திமுக விதிகளை பின்பற்றி கவனமாக எந்தச் செயலையும் முன்னெடுத்துச் செல்லும் கட்சி. அதற்கான எடுத்துக் காட்டு முன்னம் சர்காரியா ஆணையத்திலிருந்து விடுதலை; தற்போது அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுதலை. காங்கிரஸ் எதையாவது செய்து விட்டு, தப்பை திருத்திக் கொள்ள அடித்து திருத்தி மாட்டிக் கொள்ளும் கட்சி அதற்கான எடுத்துக் காட்டு அலகபாத் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பைத்; தொடர்ந்து இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்து பெரிய சர்வாதிகாரி போல பெயர் பெற்றுக் கொண்டது. நடுவண் அரசு பாஜகவோ தெளிவாக சட்டத்தை திருத்தி விட்டு துணிச்சலாக தப்பு, ஊழல், அடாவடி, சர்வாதிகாரம் அனைத்திலும் ஈடுபடும் கட்சி. அதனால் தான் ஊடகங்கள், அறங்கூற்று மன்றங்கள் எவையாலும் அவர்களை பட்டியல் இடமுடிய வில்லை. நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காகித பணத்தாள் மதிப்பழிப்பு, நள்ளிரவில் அமல்படுத்தப் பட்ட சரக்கு-சேவை வரி, தொடங்கப் படாத, முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு முதன்மை தகுதி! தொடங்காத நிறுவனத்திற்கு விமானம் வாங்க ஒப்பந்தம்! தொடங்காத (ரஜினி) கட்சியோடு கூட்டணி! என்று இப்படி எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



