தலைமைஅமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி என்பதை. 30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடப்பு 21நாள் ஊரடங்கை அதன் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்று ஆய்வு செய்யாமலே நடுவண் அரசு அறிவித்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில்- கொரோனா பரவல் ஆபத்தானதா? அதற்காகவென்று முன்னெடுக்கப் பட்டுள்ள ஊரடங்கு ஆபத்தானதா? என்கிற பட்டிமன்றம் நாடெங்கும் அறிவாளர் நடுவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காரணம்: ஊரடங்கிற்கு உரிய நிவாரணம் இல்லை. தமிழக அரசு சில நிவாரணங்களை முன்னெடுத்திருந்தாலும், அது யானைப்பசிக்கு சோளப்பொரியே. பலருக்கு அந்த சோளப்பொரியும் இல்லை என்பதுதாம் சோகம். அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நேற்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றை தடுக்க மருத்துவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியைஉடனடியாக ஒதுக்க வேண்டும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திரமோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நுண்ணுயிரிப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி நேற்று காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றுப்பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக தலைமைச் செயலர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மூத்த ஆட்சிப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்வண்டி, விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. தொடர்வண்டிகளிலும் சுமையுந்துகளிலும் மாநிலங்களுக்கு இடையிலான மளிகை உள்ளிட்ட கட்டாயத்தேவைப் பொருட்களின் போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வேளாண்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 மற்றும் கட்டாயத்தேவைப் பொருட்கள் வழங்கவும் கூடுதல் நிதியை அளிக்க வேண்டும். தமிழகத்துக்கு பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை மற்றும் அதிவிரைவு பரிசோதனை உபகரணங்களை அதிகளவில் நடுவண் அரசு வழங்க வேண்டும். பாதுகாப்பு உடைகள், என்-95 முகக்கவசங்கள், மூச்சுக்கருவிகள் (வெண்ட்டிலேட்டர்கள்) போதுமான அளவுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே கோரியிருந்த ரூ.3 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும். மேலும், கொரோனா தடுத்தல் மற்றும் அதன் மூலம் மாநில பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஒருங்கிணைந்த திட்டத்துக்காக தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை அளவை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு என்பதில் இருந்து 4.5 விழுக்காடாக உயர்த்த வேண்டும். கடந்த 2019-20-ம் ஆண்டில் அனுமதித்ததுபோல் 2020-21-ம் நிதியாண்டிலும் கடன் பெறும் அளவை 33 விழுக்காட்டிற்கு அதிகமாக அனுமதிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான நிதி ஆணையத்தின் மானியத்தில் 50 விழுக்காடும் வருவாய் பற்றாக்குறை மானியத்தில் 50 விழுக்காடும் தற்போது விடுவிக்கப்படலாம். கடந்த 2019-20- டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சரக்குசேவைவரி நிலுவையை உடனடியாக விடுவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு வங்கியால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 30 விழுக்காடு வழிவகை மானியம் இந்த 2020-21-ம் நிதியாண்டில் இரண்டு மடங்காக்கப்பட்டு, வட்டியின்றியும் வழங்கப்பட வேண்டும். மாநில பேரிடர் நிவாரண நிதியை இதர மாநிலங்கள் 120.33 விழுக்காடு பெறும் நிலையில், தமிழகம் வெறும் 64.65 விழுக்காடு அளவுக்கே பெறும் வகையில் 15-வது நிதி ஆணையத்தின் வழிமுறை அமைந்துள்ளது. தமிழகம், கடந்த 2016-ல்வார்தா, 2017-ல் ஒக்கி, 2018-ல்கஜா புயல் என தொடர்ந்து பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. இருப்பினும் இதுவரை மாநில பேரிடர் நிதிக்கு குறைந்த அளவு நிதியே ஒதுக்கப் பட்டுள்ளது. எனவே, உடனடி நிதியாக மருத்துவம் மற்றும் பாது காப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



