உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பரவல் சமூகஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆரியத்தொன்மக்கதைகள் அடிப்படையில், கும்பவிழா நடத்தப்படுவது வழக்கம். விழா நாட்களில் ஹரித்வார் கங்கை ஆற்றில் நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஆரியத்தொன்மக்கதைகள் அடிப்படையிலான நம்பிக்கை. இதற்காகவே கும்பவிழாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரே நேரத்தில் கங்கை ஆற்றில் நீராடுவர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக 3 மாதங்கள் நடைபெற வேண்டிய கும்பவிழா நிகழ்வுகள் 2 மாதங்களாக குறைக்கப்பட்டன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஹரித்வார் நகரில் பல்லாயிரக்கணக்கில் வடஇந்திய பக்தர்கள் அலை அலையாக அணி திரண்டனர். இப்படி பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்ததால் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதனையும் உத்தரகாண்ட் மாநில அரசால் கடைபிடிக்க முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இப்போது ஹரித்வார் நகரமே பெரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்றார். இந்த நிலையில் வட இந்திய ஹிந்துக்களால் தெய்வீகமானவர்களாகப் போற்றப்படுகிற சாதுக்களின் தலைவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் கபில் தேவ் தாஸ் (65) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கபில்தேவ் தாஸ் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாதுக்கள் கும்பவிழாவைக் கைவிட்டு விட்டு தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி உள்ளனர். சாதுக்களுக்காக மொத்தம் 13 அமைப்புகள் உள்ளன. இவைதான் அகாடாக்கள் அல்லது அகாராக்கள் என அழைக்கப்படும். இவற்றில் பெரிய எண்ணிக்கையிலான சாதுக்களை கொண்டது ஜூனா அகாடா. இந்த ஜூனா அகாடா சாதுக்களும் கும்பவிழாவை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு சாதுக்கள் அமைப்பான நிரஞ்சனி அகாடாவும் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. இதனிடையே ஹரித்வார் நகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் மிக அதிகமான உச்சகட்டமான பாதிப்பு இது. இதனால் ஹரித்வார் நகரில் கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்தால் இதைவிட மிக மோசமான ஆபத்துகளும் அழிவுகளும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பரவல் சமூகஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கும்பவிழாவில் கலந்து கொண்டவர்களில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.