Show all

நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்குக் கொரோனா! சாத்தான்குளம் கொலை வழக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளில் சிலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளில் சிலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கிறது. இதற்காக இரண்டு கிழமைகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து சுக்லா என்பவர் தலைமையில் 8 பேர் கொண்ட நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை குழுவினர் மதுரை வந்தனர்.
  
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சிறீதர், துணை ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 பேர்களில் சிறீதர் உள்ளிட்ட 8 பேரை அடுத்தடுத்து காவலில் எடுத்து நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரித்து வாக்குமூலம் வாங்கியது.

காவலில் எடுத்தவர்களை மதுரை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் வைத்தும், சாத்தான்குளத்துக்கு நேரில் அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

இந்நிலையில் 2-வது கட்டமாக காவலில் எடுத்த துணை காவல் ஆய்வாளர் பால் துரை உள்ளிட்ட மூன்று காவலர்களை விசாரித்தபோது, முந்தாநாள் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை குழுவில் இடம்பெற்ற சச்சின், சைலேஷ் குமார் மற்றும் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மதுரை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற் பட்டோருக்கும், வழக்கில் கைதான காவல் துறையினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளான பவன்குமார், அஜய்குமார் மற்றும் கைதான சிறப்பு துணை ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், ஆயுதப்படை காவலர் தொடர்வண்டித்துறை மருத்துவமனையிலும், சிறப்பு துணை ஆய்வாளர் பால்துரை மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகம் முழுவதும் நுண்நச்சுக் கொல்லி தெளிக்கப்பட்டது. இச்சூழலில் சாத்தான்குளம் வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.