நலங்குத்துறை காவல்துறை கட்டாயத் தேவைப் பணிகளை விட்டு விடுவோம். மற்றபடி வருமான வாய்ப்பை இழக்காமல் சில பல கட்டாயத் தேவைப் பணிகளில் ஈடுபடுவோர் கொரோன பாதிப்பை அடையவும், கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களாகவும் அமைகிறார்கள். அவர்களில் சிலர் துளியும் கவலையில்லாமல் கொரோனாவைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இரண்டு நபர்கள் மட்டுமே இருநூற்று இருபது பேர்களுக்கு கொரோனா பரப்பிய கதையைத்தான் இங்கே படிக்கப் போகிறோம். உதகை மஞ்சூர் அருகே, இருவரால் மட்டும், 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிராமத்தில், திருமண நிகழ்ச்சி நடந்தது. விதிகளை மீறி அதிகம் பேர் பங்கேற்றுள்ளனர். அதில், பெங்களூரிலிருந்து வந்த இளைஞரால், தொற்று பரவியுள்ளது. நிகழ்ச்சிக்கு பின், காய்ச்சல், சளியால் சிலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நலங்குத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த நிகழ்ச்சியால் மட்டும் இதுவரை, 105 பேருக்கு தொற்று பரவியுள்ளது. அதே போல், எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலரால் தொற்று ஏற்பட்டது. அங்கு பணிபுரியும், 750 ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில். 115 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு அலட்சிய சம்பவத்தால், மொத்தம், 220 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில், 140 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பதுதான் ஆறுதல் தரும் செய்தியாகும். தவிர்க்க முடியாமல் கட்டாயத் தேவைப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குக் கொரோனா பாதித்திருப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரியவர சிலநாட்கள் ஆகலாம். எனவே அப்படியானவர்கள் பணிதவிர்த்த மற்ற நேரங்களில் மற்றவர்களின் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகமான ஈடுபாட்டோடு செயல்பாட்டால் இதுபோன்ற கொத்து கொத்தான கொரோனா பரவலைத் தடுக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



