செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார். 04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த கிழமை அக்கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 114ல் இருந்து 92ஆக குறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். எனது உரை முடிந்ததும் நீங்கள் பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.’’ எனக் கூறியிருந்தார். ஆனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். சட்டப்பேரவை நேற்று கூடும் என ஆளுநர் அறிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு உணவகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று போபால் திரும்பினர். எனினும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. உணவகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும், நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது. இந்த பரபரப்பான சூழலில் மத்திய பிரதேச சட்டப்பேரவை நேற்று கூடியது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்து சேர்ந்தனர். கொரோனா தொற்று பீதி காரணமாக பலர் முககவசம் அணிந்து அவைக்கு வந்தனர். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் வரவுசெலவுத்திட்டக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதிருப்தி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள அவைக்கு வரவில்லை. கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று ஆளுநர் லால்ஜி தாண்டன் உரையாற்றினார். ஆனால் ஒரு நிமிடம் மட்டுமே உரையாற்றிய அவர், உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர், ஆளுநரின் உத்தரவின்படி சட்டமன்றத்தில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை நாளது 13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 வரை (26.03.20) ஒத்திவைப்பதாக பேரவைத்தலைவர் அறிவித்தார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என, அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



