Show all

ஒன்றிய பாஜக அரசின் வழ வழ கொழ கொழ பேச்சுக்கெல்லாம் நாங்கள் ஆள் இல்லை! விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

ஒன்றிய பாஜக அரசுடன் வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளனர் உழவர் சங்கப் பேராளர்கள் திட்டவட்டமாக. 

24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு புதியதாக முன்னெடுத்துள்ள கருப்பு வேளாண் சட்டப் பாட்டில் ஒன்றிய பாஜக அரசுடன் வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என உழவர் சங்கப் பேராளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவீர்களா? இல்லையா? என்பதை மட்டும் தங்களுக்குத் தெரிவிக்குமாறும் மற்றபடி சுற்றி வளைத்து பேசுவதற்கு இதில் ஒன்றுமில்லை எனப் பொட்டில் அடித்த மாதிரி கூறியுள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கருப்பு வேளாண்  சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் உழவர்கள் பேரளவான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வருகின்றன. இதனால் இதனை தன்மானப் பிரச்சனையாக கருதும் ஒன்றிய பாஜக அரசு (எதையாவது போட்டுக் குட்டையைக் குழப்பி மீன் பிடித்து விடலாம் சொலவடையாக) போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கருதுகிறது.

ஆனால் போராட்டக்களத்தில் உள்ள உழவர்களோ பாஜகவை நன்கு புரிந்து வைத்திருப்பவர்களாக, இம்மியளவு கூட பின்வாங்கமாட்டோம் என நெஞ்சுயர்த்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை ஒன்றியப் பாஜக அரசுடன் 5 கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டும் பாஜகவின் பாச்சா பலிக்கவில்லை. இந்நிலையில் நாளை 6-வது கட்ட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கருப்பு வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க, அமித்சாவை சந்தித்து வேளாண் சங்கப் பேராளர்கள், வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவரிடம் திட்டவட்டமாகத் தெரிவிப்போம் எனக் கூறியுள்ளனர். மேலும், தங்களுக்குத் தேவை ஆம் இல்லை என்ற பதில்தானே தவிர சுற்றிவளைத்து பேச எதுவும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே உழவர்கள் கோரிக்கை மற்றும் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் முறையிடப்படவுள்ளன. இராகுல்காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.