தமிழகத்தில் ஆங்காங்கே, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அரசு மருத்துவமனைகள் முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் தலைவர் கோடீஸ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் நாகராஜன், பல் மருத்துவ சங்க செயலாளர் ஆனந்த் யோகேஷ், அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சேக் மற்றும் மருத்துவர் சுரேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர். பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து- ஆர்எஸ்எஸ்சின் வேதாந்தக் கொள்கைகளின் முதன்மை அடையாளங்களைத் தலைமைப் படுத்தி- ஒரேநாடு ஒரே ஆதார், ஒரேநாடு ஒரே சரக்கு சேவை வரி, ஒரேநாடு ஒரே ஹிந்திமொழி, ஒரேநாடு ஒரே ஹிந்துத்துவா மதம் என்றெல்லாம் பல சட்டமுன்வரைவுகளை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில் ஆயுர்வேதா மருத்துவமுறைக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் முகமாக அதில் மேற்படிப்பைத் தொடங்குகிறது. அந்த மேற்படிப்பில் ஒரேநாடு ஒரே மருத்துவ முறை என்று அல்லோபதியின் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை ஆயுர்வேதா மேற்படிப்பில் பயிற்றுவிக்க முனைந்திருக்கிறது. சித்தா, ஆயுர்வேத, யோகா மற்றும் யுனானி படிப்புக்கு ஒன்றிய அரசின் அனுமதி வழங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பாஜக மேற்படிப்பில் அதனை நவீன அலோபதி மருத்துவ முறையில் கற்பது மற்றும் பயிற்சி அளிப்பது என்கிற நிலையை முன்னெடுத்து வருகிறது. இது ஏற்க கூடியது அல்ல. உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கலப்பு மருத்துவப் படிப்பு கிடையாது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல்பாட்டை ஏற்க முடியாது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நடப்பு அல்லோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே அரசு மருத்துவமனை எதிரில் இந்திய மருந்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய பல்மருத்துவர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் பங்கேற்று வருகின்றனர். இந்த வகைப் போராட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபாளையம் கிளைத் தலைவர் ஜவகர்லால் தலைமை வகித்தார். ஒன்றிய பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஆயுர்வேத மருத்துவர்களும் நவீன அறிவியல் அறுவை சிகிச்சைகளை, பயிற்சி எடுத்துக் கொண்டு செய்யலாம் என்ற வழிகாட்டுதலை கண்டித்தும், இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய ஆணையத்தின், ஒரே நாடு ஒரே மருத்துவ முறை, என்று ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பை உருவாக்க அமைத்துள்ள குழுக்களைக் கலைக்க வலியுறுத்தியும், புதிய ஒன்றியக் கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வியில் பக்கவாட்டு நுழைவு முறையை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



