அண்மைக் காலமாக சௌக்கிதார் என்று தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் மோடியை எதிர்த்து போட்டியிட, வேட்பு மனு பதிகை செய்த உண்மையான காவல்காரராக இருந்தவரான தேஜ் பகதூர் யாதவ் மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளது. 18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டில் மூன்று காணொளிகளை பகிர்ந்ததால் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் தேஜ்பகதூர். இந்நிலையில் அவர் மோடிக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு பதிகை செய்திருந்தார். சமாஜ்வாதி கட்சி அவரை தமது அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்திருந்தது. தேஜ்பகதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. அவர், ராணுவ வீரர்களுக்கு காய்ந்து போன ரோட்டி மற்றும் மோசமான உணவே வழங்கப்படுகிறது. பொதுவாக இதை உண்பதை ராணுவ வீரர்கள் தவிர்கின்றனர் என்று கூறி அவர் வெளியிட்ட காணொளி மக்கள் நடுவே இரக்கத்தையும் சீற்றத்தையும் உண்டாக்கியது. அண்மைக் காலமாக மோடி ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தேர்தல் கருத்துப்; பரப்புதல்களில் பேசி வருவதும், தான் ஒரு முன்னால் இராணுவ வீரர் போல தன்னை சௌக்கிதார் (காவல்காரன்) என்றெல்லாம் பிரகடனப் படுத்தி வருவதுமான நிலையில், மோடிக்கு எதிராக போட்டியிடுவதாக மோடி அரசால் பலிவாங்கப் பட்ட தேஜ்பகதூர் உயர் மின்அழுத்த மின்கோபுரமாகப் பார்க்கப் பட்டார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அவரது மனுவை நிராகரித்துள்ளது. காரணம் பதவி நீக்கம் செய்யப் பட்ட இராணுவ வீரர் என்ற நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,139.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.