வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி தற்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி தற்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இதே போன்ற காரணங்களால் திவாலாகி, இன்றுவரை மீட்டெடுக்கப்படாமல், போராட்டம் நடத்தியும் பயனடையாதவர்களாக, அதன் வாடிக்கையாளர்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் தற்போது, அந்த வரிசையில் இணைய வேண்டிய எஸ் வங்கி என்ற தனியார் வங்கி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ராணா கபூர், அசோக் கபூர் இருவரும் இணைந்து எஸ் வங்கியைத் தொடங்கினார்கள். இவர்களில் அசோக் கபூர், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானார். அதன்பின் ராணா கபூர் மட்டுமே அந்த வங்கியின் தலைவராகச் செயல்பட்டார். ராணா கபூரின் ஒற்றைத் தலைமையின்கீழ் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.3,00,000 கோடி சொத்து மதிப்புள்ள மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார். எஸ் வங்கி நிறுவனத்தைப் பொறுத்தவரை, மற்ற வங்கிகள் கடன் வழங்க மறுத்த நிறுவனங்களுக்கு தாங்கள் கடன் வழங்க முன்வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அந்த நிறுவனங்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுப்பதன்மூலம் வங்கியை வளர்ச்சியடையச் செய்யலாம் என்று ராணா கபூர் எண்ணினார். இந்த இடத்தில்தான் ராணா கபூர் சறுக்கினார். இவர் எதிர்பார்த்தபடி வங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தாலும், அதிக வட்டி காரணமாக வாராக்கடனும் அதிகரித்தது. வாராக்கடன் சிக்கலில் பெரிதும் அடிபட்ட நிறுவனங்களான ஐ.எல் ரூ எப்.எஸ், டி.ஹெச்.எப்.எல், ஜெட் ஏர்வேஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கபே காபி டே உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்துக்கும் கடன் வழங்கிய வங்கிகளில் எஸ் வங்கி முதன்மைப் பங்கெடுத்தது. இந்த நிலையில்தான் எஸ் வங்கியை இந்தியக்கட்டுபாட்டு வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தற்போது, எஸ் வங்கியை இந்திய மாநில வங்கி கையகப்படுத்தும் என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ தெரிவிப்பது என்னவென்றால்:-வங்கியின் வீழ்ச்சிக்கு இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியின் செயல்பாட்டில் இருக்கும் தவறு முதன்மைக் காரணமாக இருக்கிறது. இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி இந்தச் சிக்கலை முன்பிருந்தே சரியான முறையில் கையாண்டிருந்தால் இந்த நிலை வராமல் தடுத்திருக்கலாம். ஆனால், இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியைத் தன்முயற்சியாகச் செயல்பட நடுவண் அரசு அனுமதிக்கவில்லை. எஸ் வங்கி, தனியார் வங்கியாக உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதால் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது. அதேவேளை, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, கூட்டுறவு வங்கியாக இருப்பதாலும், அதன் வாடிக்கையாளர்கள் அடித்தட்டு எளிய மக்களாக இருப்பதாலும் அந்தச் சிக்கலைத் தீர்க்க இன்றுவரை முன்வரவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு தவறானது என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



