அடுத்த மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் இடைநிலைக்கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் இடைநிலைக்கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. நடுவண் இடைநிலைக்கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் தொடங்கிய போதும், கொரோனா ஊரடங்கால், 12ம் வகுப்பில், சில பாடங்களுக்கு தேர்வு நடத்த முடியாமல் போனது. 10ம் வகுப்பை பொறுத்தவரை, டில்லியில் சில பகுதிகளை தவிர, நாடு முழுவதும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஒத்தி வைக்கப்பட்ட, 12-ம் வகுப்பு தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக, இரத்து செய்ய வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 அறங்கூற்றுவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை இரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும், வகுப்பு நடவடிக்கை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது. இந்நிலையில், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அணியமான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், அடுத்த மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, தமிழகத்தில், தேர்வுகளை நடத்தும் சூழ்நிலை இல்லை என மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



