டெல்லியில், நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையான, நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் ஆயுத காவல் படை வீரர்கள் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், டெல்லியில் நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. நடுவண் ஆயுத காவல் படை என்பது நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில ஒன்றிய பகுதி சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5041: (27.07.1939) பிரித்தானிய அரச பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்தக் காவல் படை இந்திய விடுதலைக்குப் பிறகு நடுவண் ஆயுத காவல் படையானது. அண்மைக் காலங்களில், சட்டஒழுங்கு பாதுகாப்பிற்கு அடுத்ததாக நாட்டின் பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. முதன்மையாக சம்மு காசுமீர், பீகார் மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படை இதுவேயாகும். கொரோனா நுண்ணுயிரித் தொற்றால் டெல்லியில் நடுவண் ஆயுத காவல் படை வீரர்கள் 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களுக்கும் கரோனா உறுதியானதால், தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டது 31-வது பட்டாலியனைச் சேர்ந்த நடுவண் ஆயுத காவல் படை வீரர்கள் 135 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி மயூர் விஹார்-3 பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதிப்பு மேலும் பரவாதபடி பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லி லோதி சாலையில் உள்ள 5 அடுக்கு மாடியில் இருக்கும் நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலக்தில் சிறப்பு இயக்குநரின் தனி உதவியாளருக்கு நேற்று கொரோன தொற்று இருப்பது உறுதியானது. மேலும், தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு வரும் ஊழியர்களை அழைத்து வரும் நடுவண் ஆயுத காவல் படை பேருந்து ஓட்டுநருக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இரு ஊழியர்களும் தலைமை அலுவலகத்தில் நேரடியாக அனைவருடனும் தொடர்பில் இருந்ததால் அலுவலகமே முத்திரை வைத்து இன்று மூடப்பட்டது இதுகுறித்து நடுவண் ஆயுத காவல் படை இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், கோவிட்-19 வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். நடுவண் ஆயுத காவல் படை சிறப்பு இயக்குநர் ஏற்கனவே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அலுவலத்தில் நுண்ணுயிரிக் கொல்லி தெளிக்கப்பட இருப்பதால் தலைமை அலுவலகம் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. யாரும் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்தார் இதற்கிடையே நடுவண் ஆயுத காவல் படை பிரிவில் 31-வது பட்டாலியனில் கடந்த இரு கிழமைகளில் இதுவரை 135 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா எனத் தெரியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நடுவண் ஆயுத காவல் படை வீரர்களுக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மன்டோலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் நடுவண் ஆயுத காவல் படை துணை ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து 12 வீரர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தியபோதுதான் ஏராளமான வீரர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



