Show all

வியாழக்கிழமை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்! ஒன்றியத் தலைமை அமைச்சருடன் சந்திப்பு

தலைமைஅமைச்சர் ஒப்புதல் கொடுத்ததின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை அன்று காலை தலைமைஅமைச்சரை நேரில் சந்திக்கிறார்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரும் வியாழக்கிழமை டெல்லி செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தலைமைஅமைச்சரைச் சந்திக்கிறார். அப்போது தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இருப்பதால் வேறு பணிகள் எதிலும் அரசு ஈடுபடவில்லை.

முதல்வராகப் பொறுப்பேற்றபின் திருச்சியில் முதன்முறையாகப் பேட்டி அளித்த ஸ்டாலின், டெல்லி செல்வீர்களா என்கிற கேள்விக்கு, தற்போது கொரோனா தொற்று அதிகம் இருக்கிற காரணத்தால் எங்கள் முதல் பணி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபின் கண்டிப்பாக டெல்லி செல்வேன். தலைமை அமைச்சரைச் சந்தித்து தமிழகத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இதுவரை தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், உயிர்வளித் தேவை, ரெம்டெசிவிர் மருந்து, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து தலைமைஅமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதி வந்தார். மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றதன் காரணமாக, மக்கள் சேவையாற்றுவதை இனியும் தவிர்க்க முடியாது என்கிற நிலைப்பாட்டிற்கு வந்த பாஜக- மாநிலங்களுக்குத் தடுப்பூசி இலவசம் என அறிவித்ததை வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த திங்கட் கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு இடையில் டெல்லி சென்று தலைமைஅமைச்சரைச் சந்திக்க முடிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின். எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க தலைமைஅமைச்சர் ஒப்புதல் கொடுத்ததின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை அன்று காலை தலைமைஅமைச்சரை நேரில் சந்திக்கிறார். பின்னர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம், கட்சி அலுவலகப் பணிகளையும் பார்வையிடுகிறார். அன்று மாலை சென்னை திரும்புகிறார்.

தலைமைஅமைச்சரைச் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கான கோரிக்கைகளை வைக்க உள்ளார். தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு, தமிழகத்துக்கான சரக்குசேவை வரித் தொகை, நீட் இரத்து உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் குறித்து அப்போது தலைமைஅமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.