இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது 21 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. 28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பணமெடுப்பு இயந்திரங்களில் பணமெடுக்கக் கிளம்பினால், பல்வேறு வங்கிகளின், பத்து பணமெடுப்பு இயந்திரங்களில் ஏறிஇறங்கியே பணமெடுக்க முடிகிற பொறுப்பற்ற நிருவாகமே பணமெடுப்பு இயந்திரங்களைப் பொறுத்த நிருவாக நிலையாகும். ஆனால் நமது கணக்குள்ள வங்கி அல்லாமல் வேறு வங்கி பணமெடுப்பு இயந்திரங்களில் மூன்று முறைகளுக்கு மேல் பணம் எடுத்துவிட்டால், அதற்கு கட்டணமாக நமது சேமிப்பில் இருந்து பணம் தானாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். இந்த வகையான கட்டணத்தைத்தான் ஒன்றிய கட்டுப்பாட்டு வங்கி மேலும் உயர்த்த இருக்கிறதாம். வாடிக்கையாளர்கள் மாற்று வங்கி பணமெடுப்பு இயந்திரங்களில் இருந்து பணமெடுக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 ரூபாயை தற்போது கட்டணமாக மாற்று வங்கி அல்லது பணம்வழங்கும் இயந்திர நிறுவனங்களுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகள் கட்டணமாக கொடுத்து வருகின்றன. இதனை 17 ரூபாயாக உயர்த்தி ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123 (01.08.2021) அன்றிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வங்கி பணம்வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்) மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெருநகர எல்லைக்குள் வராத பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஐந்து இலவச பரிவர்த்தனையாக இருந்து வருகிறது. சில வங்கிகள் குறிப்பிட்ட இலவச பரிவர்த்தனைக்கு மேல் தங்கள் சொந்த வங்கி பணம்வழங்கும் இயந்திரங்களிலேயே கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஏற்கனவே வழக்கத்தில் கொண்டுள்ளது. இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பணம்வழங்கும் இயந்திரப் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.