கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா குணமாவதாகவும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. 09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து, பலபேர்களைக் குணப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் 5 அல்லது 7 நாட்களில் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் எங்களின் மருந்தை வெளியிடுவோம் என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கடந்த கிழமை கூறியிருந்தார். அதன்படி, இன்று கொரோனில் என்ற பெயரில் கொரோனா நோயைக் குணப்படுத்த முடியும் என்பதாக ஒரு மருந்தை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கூறுகையில், இந்த மருந்து 280 நோயாளிகளிடத்தில் பரிசோதிக்கப்பட்டது. முதல் 3 நாட்களில் 69விழுக்காடு கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். 7 நாள்களில் அனைத்து நோயாளிகளும் 100 விழுக்காடு குணமடைந்தனர். இந்த மருந்தை கொடுத்து பரிசோதித்த நோயாளிகளில் ஒருவர் கூட இறக்கும் நிலை ஏற்படவில்லை. பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த (நிம்ஸ்) 500 இயல்அறிவர்கள் இணைந்து இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வகந்தா, துளசி கலவையிலிருந்து தயாரிக்கப்படும் கொரோனில் மருந்து கொரோனா நுண்நச்சு தொற்றுக்கான முதல் சான்று அடிப்படையிலான ஆயுர்வேத மருந்து ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 9,226,248 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,970,823 பேர்கள் குணமடைந்துள்ளனர். அதாவது 54 விழுக்காட்டினர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தேவலாம் என்கிற செய்திதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த குணமளிப்புகள் சேவையாக முன்னெக்கப் பட்டிருக்கின்றன. ஊலகில் முதலாவதாக பதஞ்சலிதான் வணிக அடிப்படையில் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம் என்ற அடிப்படையிலும், நடுவண் ஆட்சியாளருக்கு மிக நெருக்கமானவர் என்கிற அடிப்படையிலும். அவர் எந்த அனுமதி வாங்கியிருந்தாலும் வாங்கவிட்டாலும் அனுமதிகளை வீடு தேடி வரவழைப்பதற்கான ஆற்றல் மிக்க நிறுவனம் என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஆனால் இதுவரை சேவை அடிப்படையில் மீட்டெடுக்கப்பட்டு வந்த அந்த 54 விழுக்காட்டு குணமளிப்பை முந்திக்கொண்டு, கொடுக்கிற காசுக்கு தேறவேண்டும் இந்த வணிக முயற்சி என்பதே அனைவரின் ஆர்வமாக இருக்கும். ஆனால் நாம் கொரோனாவை வெற்றி கொள்ள எதிர் நோக்கியிருப்பது- புதிது புதிதாக அணிவகுக்கிற, வணிகப் போட்டிக்கான குணமளிப்பு மருந்துகளுக்காக அல்ல. நமது எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பு கொரோனா தடுப்பு மருந்தே! அதுவே ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வருவதற்கு முன்பாக காப்பாற்ற முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.