பதினேழு அகவை மாணவி ஸ்னோலி உட்பட 13 நபர்கள் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதில் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது கடந்த மாதத்தில். அதே மண்ணில் மீண்டும் இருவர் படுகொலையா? 09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடத்தப்பட்ட அமைதிப் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு, பதினேழு அகவை மாணவி ஸ்னோலி உட்பட 13 நபர்கள் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது இடங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் சிறிய அளவில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தங்களது வீடுகளில், தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் பதாகைகள் வைத்து மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நடத்தினர். தூத்துக்குடி காவல்துறையினர் நடத்திய அந்தப் பதின்மூன்றுபேர்கள் பச்சை படுகொலைக்கே இன்னும் நியாயம் கிடைக்காத நிலையில், கடந்த மாதம் இரண்டாவது நினைவேந்தல் நடந்த இந்த நிலையில், தூத்துக்குடி காவலர்களுக்கு என்னதான் ஆயிருக்கும் என்று அச்சத்தைக் கிளப்பும் வகையாக: காவல்துறை தாக்கியதால் தந்தை - மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சடலங்களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறு ஆய்வு செய்ய சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் அறங்கூற்றுமன்றக் கிளையில் மனு ஒன்றைத் பதிகை செய்தார். அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் உடற்கூறு ஆய்வை காணொளியில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு அவசர மனுவாக அறங்கூற்றுவர் புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் உடற்கூறு ஆய்வை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். உடற்கூறு ஆய்வை காணொளியில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் அகவை 58. என்பவரது மகன் பென்னீஸ். இவருக்கு அகவை 31. இவர் சாத்தான்குளத்தில் காமராசர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்பேசிக் கடையை நடத்திவந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, பென்னீசையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்த காவல்துறையினர், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது, எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமையன்று இரவில் பென்னீசும் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, பேய்க்குளம், திசையன்விளை ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பென்னீசும் ஜெயராஜும் தரையில் உருண்டதால், காயம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். யாராவது காயம் ஏற்படும்படி தரையில் உருள்வார்களா? மேலும், சாத்தான்குளத்திற்கு அருகிலேயே பல கிளைச் சிறைகள் இருக்கும்போது 100 கி.மீ. தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தது ஏன்?" என இறந்தவர்களின் உறவினரான சார்லஸ் கேள்வி எழுப்புகிறார். காவல்துறையினர் காவலில் இருக்கும்போது பென்னீஸின் ஆசன வாயில் லத்தியால் குத்தியதால் ஏற்பட்ட இரத்தப் போக்கினாலேயே அவர் உயிர் பிரிந்ததாக சார்லஸ் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதற்குப் பிறகு, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அந்தக் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களுமே இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார். இந்த முன்னெடுப்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். காவல்துறையினரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாத்தான்குளம் காமராசர் சிலை அருகே வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். வணிகர்கள் காவல்துறையில் தாக்கப்பட்டு இறந்திருப்பதால், நாளை கடைகளை அடைக்கப்போவதாக சில வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.