Show all

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சாலைபோட்டு சுங்கம் வசூலிக்க வரவு-செலவு திட்டத்தில் நிதி! பாஜக இங்கே கால்தடம் பதிக்கவாம்

ஒன்றிய பாஜக அரசு, சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கால்தடம் பதிக்கவாம். வரவு-செலவு திட்டத்தில் சாலைபோட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

19,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தல் நடைபெறவுள்ள மாநில மக்களின் மனங்களில், ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக இடம் பிடிக்க, ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதை அது தமிழகத்தில் கூட்டணி வைக்கும் அதிமுகவிடம் கேட்டாலே தெளிவாகப்பட்டியல் இட்டுக் கொடுக்கும். 

ஆனால் ஒன்றிய பாஜக அரசு, மாநிலங்களில் கால்தடம் பதிக்க, வரவு-செலவு திட்டத்தில் சாலைபோட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அது சுங்கம் வசூலிக்க உதவுமேயன்றி மக்கள் மனங்களில் இடம்பிடிக்க உதவும் திட்டமாகாது. முன்பே எட்டுவழிச் சாலைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு பதிவாகி வாதம் வம்பு வழக்குகளை அல்லவா சந்தித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.65,000 கோடி
தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.25,000 கோடி செலவில் 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகள்

நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிகை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டுக்குக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த வரவு-செலவுத் திட்ட உரையில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அவர்களுக்கு தோன்றிய வகையில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சாலைத் திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நெடுஞ்சாலை உள்பட தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.65,000 கோடி, கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்பாடு உள்ளிட்ட மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.25,000 கோடி செலவில் 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தற்போது ரூ.19000 கோடி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், 1300 கி.மீ க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ.34,000 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட நான்கு மாநிலங்களில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கால்தடம் பதிக்க விரும்பும் பாஜக, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.