Show all

உழவருக்கு பிரேசில் நாடு அழைப்பு! பாரம்பரிய வேளாண்மை, விதைவங்கி செயல்பாட்டிற்காக

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், வயநாடு அருகே கம்மனா பகுதியைச் சேர்ந்த உழவர் செருவயல் ரமணா. இவரின் குடும்பத்தினர் பரம்பரையாக வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் இன்னும் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய வேளாண்மையையும் உரங்களையும், விதைகளையும் மட்டுமே பயன்படுத்தி உழவு செய்து வருகிறார்.

கேரளாவின் பாரம்பரிய நெல், மூலிகைகள், வாசனைத் திரவிய மரங்கள், செடிகள் போன்றவற்றின் 47 வகை விதைகளை இன்னும் பாதுகாத்து அவற்றை உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு செருவயலார் வழங்கி வருகிறார். இவரின் செயலைப் பார்த்த பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் இவரைக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அரசு சார்பில் அழைத்துள்ளது.

பெலீனா நகரில் வரும் செவ்வாய்க் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. உயிரிதொடர்பியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமல், சூழலை மாற்றாமல் வாழ்வது குறித்த கருத்தரங்களில் பேசவும், செறுவயலார் நடத்தும் பாரம்பரிய விதை வங்கி குறித்து பேசவும் பிரேசில் செல்கிறார்.

இதற்கு முன், பிரேசில் நாட்டில் உள்ள பயிர்வகை பாதுகாப்பு மற்றும் உழவர்கள் உரிமை ஆணையம் சார்பில் தேசிய பயிர் பாதுகாப்பு விருது செறுவயலாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்தரங்குக்கு அழைத்துச் செல்லும் சுற்றுச்சூழல் வல்லுநர் சாஜி தாமஸ் கூறுகையில், உலக அளவில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சமூகத்தினர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதித்துக் கொள்ளவும், மரபுவழி வேளாண்மை, தொழில்களில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

 

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது, உலகச் சூழலியல் மாற்றம், உணவு, பாலினம், புத்தாக்கம், பாரம்பரிய மருத்துவம், உயிர் சூழலியல்;, உயிர் சூழலியல் மேலாண்மை ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கருத்தரங்கில் கேரளாவில் பாரம்பரியமாக விதை வங்கி நடத்தி வரும் செறுவயலார் அழைக்கப்பட்டுள்ளார். இதில் 50 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் ஆய்வாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,869.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.