மேதகு படத்தில், பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் அதிகாரத்தில் (ஆம். முழு வரலாறு சொல்ல வில்லை இந்தப் படத்தில்) சொல்லப்பட்டிருக்கிறது. 

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய எழுதப்பட்டிருக்கிறது. நிறைய பேசப்பட்டிருக்கிறது. சிறு சிறு காணொளிகளின் வழியாகவும் நிறைய தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, முதன்முறையாக, மேதகு என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக, அதேபோது, வரலாற்றின் ஒரேயொரு அதிகாரம் மட்டும் வெளிவந்துள்ளது.

தமீழழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும் தமிழ் உணர்வாளருமான கிட்டு இயக்கத்தில், வெளியாகியிருக்கிறது மேதகு. பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கடந்த வெள்ளியன்று வெளியான இந்தத் திரைப்படத்துக்கு உலகத்தமிழர்கள் நடுவே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிரான செயல்பாடுகளை, அறவழியில் எதிர்கொண்ட தந்தை செல்வாவின் போராட்டங்கள், தொடர்ந்து பண்டாரநாயகே - தந்தை செல்வாவுக்கு இடையிலான ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள், கல்வி தரப்படுத்துதல் சட்டம் (பாஜகவின் புதியக்கல்விக் கொள்கை மாதிரிதான்) என்கிற பெயரில் தமிழ் இளைஞர்களின் கல்வியைப் பறிக்கும் சிங்கள அரசாங்கத்தின் முடிவு, அதற்கு எதிரான தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டங்கள், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதவழி போராட்ட இயக்கத்துக்கான தொடக்கம் வரை இத்திரைப்படத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த வரலாற்றைக் கதையாக ஒரு தெருக்கூத்தின் வழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர்கள் தேர்வு, காட்சியமைக்கப்பட்ட விதம் ஆகியவற்றில் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் கிட்டு. அவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படத்துக்கான விதை குறித்து இயக்குநர் கிட்டு தெரிவிப்பதாவது:
ஈழத்தில் நடந்த சிக்கல்களை மையமாக வைத்து எந்தவித திரிபுகளும் இல்லாமல் முழுமையான திரைப்படம் இதுவரை வெளியாகவில்லையே என்கிற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. அதேபோல, சமகாலத்தில் நான் பார்த்து நேசித்த அப்பழுக்கற்ற தலைவர் பிரபாகரனின் வரலாற்றை உறுதியாகச் சொல்லவேண்டும் என்கிற ஆசையும் எனக்குள் இருந்தது. ஆனால், முழுமையான திரைப்படமாக எடுக்க அதிகமாக பணம் தேவைப்படும். அதனால், கரிகாலன் உதயம் என்கிற பெயரில், குறும்படமாக எடுத்தேன். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சுமேஷ்குமார், குகன் குமார் எனும் அண்ணன்கள் தலைவரின் வரலாற்றை நாம் தன்னார்வ நிதியின் மூலமாக முழு நீளத் திரைப்படமாக எடுக்கலாம் என ஆலோசனை தந்தனர். அதனைத் தொடர்ந்துதான் அதற்கான வேலைகளைத் தொடங்கினோம். தொடக்க கட்டத்தில், நீங்கள் செய்யாதீர்கள், ஈழ வரலாற்றைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்' என ஈழத்தமிழர்களில் சிலரே கேள்வி எழுப்பினார்கள். 
படத்தின் விளம்பரக் காணொளி வெளியான பிறகு கொஞ்சம் அமைதியானார்கள். படம் வெளியான பிறகு மிகச் சரியாக எடுத்திருக்கிறீர்கள் என அவர்களே அழைத்துப் பாராட்டினார்கள். தலைவர் பிரபாகரனின் பிறப்பு முதல் துரையப்பா படுகொலை வரைக்குமான வரலாற்றை சிறிய செலவுத்திட்டத்தில் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. முதலில் 30 லட்சத்துக்குள் படத்தை முடித்துவிடவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். ஆனால், 60 - 65 லட்சம் வரை செலவாகிவிட்டது. காரணம், உளவுத்துறையினரின் நெருக்கடியால் பலமுறை படபிடிப்பைத் தள்ளிவைக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால், படத்தின் அறிமுகக்காட்சியைப் பார்த்தபிறகு அவர்களும் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.

திரைப்படம் முழுவதுமே காரைக்குடி, நார்த்தாமலை, கும்பகோணம் ஆகிய மூன்று இடங்களில்தான் எடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து சில காட்சிகள் மட்டும் பணம் கொடுத்து வாங்கி பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டோம். ஈழச்சிக்கலை வெறும் இனப்பிரச்னையாக மட்டும் பார்க்கமுடியாது. ஒவ்வொரு நாட்டுக்குப் பின்னாலும் உள்ள மத அரசியல் ஈழப் பிரச்னையிலும் உள்ளது. இலங்கையில் ஆட்சியாளர்களைவிட அதிக செல்வாக்கு உடையவர்களாகவும் அவர்களை ஆட்டி வைப்பவர்களாகவும் புத்த பிக்குகளே இருக்கிறார்கள். அவர்கள் புத்த மதத்தையே பின்பற்றவில்லை. அவர்கள் தாங்களாக எழுதி வைத்துக்கொண்ட மஹாவம்சம் என்னும் நூலைத்தான் பின்பற்றுகிறார்கள்.

அந்த நூலுக்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்பது குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்டோம். அப்போதுதான் எங்களுக்கு பல அரிய தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து, கல்வி தரப்படுத்துதல் சட்டம், அதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் குறித்த ஆவணங்களைத் தேடினோம். தமிழர்கள் படிச்சுப் படிச்சு மேல வந்து நாங்க போய் சாகுறதா? என புத்தபிக்குகள் பொதுவெளியில் கத்திக் கூப்பாடு போட்டது எல்லாம் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதை நாங்கள் படத்தில் வசனமாக வைத்திருக்கிறோம். ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டங்களுக்குள் எப்படித் தள்ளப்பட்டார்கள் என்பதற்கான தேடலே இந்தத் திரைப்படம். அடுத்த அதிகாரமும் நிச்சயமாக வெளிவரும் என்கிறார் நம்பிக்கையோடு கிட்டு. வரவேண்டும் என்கிற விருப்பத்தையும், வேண்டுகோளையும் அவருக்கு முன்வைக்க விரும்புகிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.