Show all

பேரறிவாளனுக்கு இந்த நம்பிக்கை கதை! இன்னும்கூட 29ஆண்டுகள் நம்பிக்கையோடு இருங்கள் பேரறிவாளன்

சூழ்நிலைகள் காரணமாக மக்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான முடிவாக இது இருக்காது. மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போதும் சாத்தியம் என்கிறார் ஒரு கருநாடக மருத்துவர். இந்தக் கதை பேரறிவாளனுக்கு நம்பிக்கை தர உதவுமா… 

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக மாநிலம், குல்பர்கா எனும் மாவட்டத்திலுள்ள போஸ்கா எனும் பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷ் பாட்டீல். அப்பகுதியிலுள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் தமிழ்தொடர்ஆண்டு-5097ஆண்டு (ஆங்கிலம்1997)  ‘மருந்துஇயல் இளவல் மற்றும் அறுவையியல் இளவல்’ படிப்பில் (எம்.பி.பி.எஸ்) சேர்ந்துள்ளார். படிக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருடைய வீட்டின் அருகில் தங்கியுள்ளார். அப்போது, அசோக்கின் மனைவி பத்மாவதி என்பவருக்கும் சுபாசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

இருவருக்கும் இடையிலான காதலை அறிந்த அசோக் என் மனைவியுடன் தொடர்ந்து பழகினால் கொலை செய்து விடுவேன்' என சுபாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பத்மாவதியும் சுபாசும், அசோக்கை கொலை செய்து விட்டனர். சுபாஷ் அப்போது எம்.ஆர் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுபாஷ், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தபோதும் மருத்துவராக வேண்டும் என்ற தன்னுடைய சிறுஅகவைக் கனவை விடவில்லை. சிறையில் இருந்தபடியே இதழியல் துறையில் பட்டயப்படிப்பு படித்து முடித்துள்ளார். நன்னடத்தையின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைநாள் அன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, என்னுடைய அப்பா எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். நன்னடத்தையின் காரணமாக சிறையிலிருந்து என்னை விடுதலை செய்த மாநில அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு துறவிக்கும் கடந்தகாலம் ஒன்று உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு என்ற கூற்றின்மீது அதிகமான நம்பிக்கை எனக்கு உண்டு. ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகத் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பேன் எனக் கூறியிருந்தார்.

இராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகம்; படிப்பைத் தொடர அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டில் தன்னுடைய எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார். கர்நாடகா மருத்துவக் குழுவிலிருந்து சான்றிதழ் பெறுவதற்காகத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்காலம் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். தற்போது இந்தப் பயிற்சிக் காலத்தையும் சுபாஷ் முடித்துள்ளார்.

சூழ்நிலைகள் காரணமாக மக்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். சிறை வாழ்க்கையே இறுதி கிடையாது. சிறையிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் நல்ல வாழ்க்கையை தொடர்வதற்கான சாத்தியங்கள் எப்போதும் உள்ளது என்று சுபாஷ் கூறியுள்ளார். இந்தக் கதை பேரறிவாளனுக்கு நம்பிக்கை தர உதவுமா… நியாய ஆர்வலர்கள் கேள்வி. இன்னும்கூட 29ஆண்டுகள் நம்பிக்கையோடு இருங்கள் பேரறிவாளன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.