Show all

அருமையான பரிசு-அமைதி திரும்பச் செய்த அதிரடிக்கு! டெல்லி வன்முறை வழக்கில் அதிரடி காட்டிய அறங்கூற்றுவர் முரளிதர் பணியிட மாற்றம்!

அறங்கூற்றுவர் முரளிதர் அதிரடியால் டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர் பஞ்சாப் - ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர், பஞ்சாப்- ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு வழங்கிய அதிரடி உத்தரவே தற்போது இவர் பணி இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்று பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இரண்டு கிழமைக்கு முன்னதாகவே முரளிதரை டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் இருந்து பஞ்சாப்-ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டுமென்று உச்ச அறங்கூற்றுமன்றத்தின் அறங்கூற்றுவர் நியமிப்புக் குழு பரிந்துரை செய்திருந்தது என்று சொல்லப்படுகிறது.

வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கல்லெறி, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை முன்னெடுத்ததால், அமைதியான போராட்டக்களம்  வன்முறைக்களமாக மாற்றப்பட்டு காவல்துறையினர் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கை டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் விசாரித்து வந்த அறங்கூற்றுவர் முரளிதர்:- அமைதிப் போராட்டத்தில் வன்முறையை முன்னெடுத்தக் குழுவினருக்கு ஊக்கமாக இருந்த, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, இந்திராகாந்தி கொலைக்கு, சீக்கியர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்ட பழைய நிகழ்வு  போன்றொரு நிகழ்வு மீண்டும் நடைபெற விடமாட்டோம், என்றும் எச்சரித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, டெல்லி வன்முறை தொடர்பாக வெளியாகியுள்ள காணொளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் அறங்கூற்றுவர்கள் முரளிதர் மற்றும் தல்வாத் சிங் தலைமையிலான அமர்வு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், வன்முறை வெடித்துள்ள டெல்லியில் பொது மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சட்டம் அவர்களுக்கு துணை நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தி, இன்று (வியாழக்கிழமை) தக்க பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு முரளிதர் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த பணி இடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

எது எப்படியோ! அறங்கூற்றுவர் முரளிதர் அதிரடியால் டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. அவருக்கு அதற்கு வழங்கப்பட்ட பரிசாக இந்த இடமாறுதலை கொண்டாடுவர் முரளிதர் என்றே நம்புவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.