Show all

எங்கே கொண்டு செல்கின்றன! இந்திய அரசின் நீட்’டும், மாநில அரசின் டாஸ்மாக்கும்! டாஸ்மாக்கில் வருமானம் அரசுக்கு; நீட்’டில் யாருக்கோ

பத்தாயிரம் ஆண்டுகால தொன்மை வாய்ந்த, குடும்பம் என்ற தமிழ்ப்பண்பாட்டுக் கட்டமைப்பில், பிள்ளைகளை சான்றோன் ஆக்கிட அல்லல் படவேண்டியுள்ளது- இந்திய அரசின் நீட்’டிலிருந்தும், மாநில அரசின் டாஸ்மாக்கிலிருந்தும் தற்காத்துக் கொண்டு.   

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா திருப்பதி மலை அடிவாரத்தில் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா, மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, அதன்மூலம் கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.  ஆனால், அவர் ஆள்மாறாட்டம் மூலமாக மருத்துவர் படிப்பில் சேர்ந்துள்ளதாக தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு மின்;அஞ்சலில் புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உதித் சூர்யாவை அழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணைக்குப் பிறகு மாணவர் உதித் சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அதேசமயம் அவர் மீதான ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருக்காக தேர்வு எழுதிய நபர் ஆகியோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில் மாணவர் உதித்சூர்யா, தனக்கு முன் பிணை வழங்கும்படி மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளையில் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனு அறங்கூற்றுவர் ஜி.ஆர்.சாமிநாதன் முன்பு நேற்று பகல் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மனுதாரர் தமிழ்நாடு காவல்துறை குற்றப்புலனாய்வு சிறப்புப் பிரிவில் முதலில் சரண் அடையலாம். அவ்வாறு சரண் அடைந்தால், இந்த முன்பிணை மனுவை, பிணை மனுவாக மாற்றி அடுத்த கிழமை விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். பின்னர் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவர் உதித் சூர்யாவும், அவரது குடும்பத்தினரும், திருப்பதி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த போது தமிழ்நாடு காவல்துறைக் குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவினர் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

வட இந்தியாவில் நீட் பயிற்சி மையங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீட் தேர்வில் வட இந்தியர்கள் அதிகம் வெற்றி பெற இந்த மையங்களும் ஒரு காரணம். வட இந்தியா போலவே தமிழ்நாட்டிலும் நீட் பயிற்சி மையங்கள் புற்றீசல்போல பெருகத் தொடங்கி விட்டன. 

நீட் தேர்வு வழியாக ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வணிகம் நடக்கிறது எனத் தன் பேச்சில் குற்றஞ்சாட்டியிருந்தார் நடிகர் சூர்யா அண்மையில்.

இந்தியாவைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் அதிகளவில் உள்ளன. ராஜஸ்தானில் கோட்டா என்ற நகரில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படுகிறது கோட்டா நகரம்.

அதேபோல், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகி வருகிறது. நீட், பொறியியல் என பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள், எந்நேரமும் படிப்பு படிப்பு என கிடப்பதால் மன அழுத்தத்தில் சிக்கி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த வகைக்கும் கோட்டா நகரமே தலைமை வகிக்கிறது.

பள்ளியில் 30 முதல் 40 மாணவர்களுடன் சேர்ந்து படித்திருப்போம். பயிற்சி மையத்தில் ஒரு வகுப்புக்கு 200 முதல் 300 மாணவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு 3 வாரத்துக்கு ஒரு முறை தேர்வு வைப்பார்கள். நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் உங்கள் பெற்றோருடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளப்படும்.

மதிப்பெண் குறைவாக எடுத்தால், பணத்தைக் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் உங்களை திட்டத் தொடங்குவார்கள். முதல் பிரச்னை இங்கே இருந்தே தொடங்கும். அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுடன் குழுவாக இருக்க அனுமதிக்கின்றன பயிற்சி மையங்கள். இல்லையென்றால் குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுடன்தான் நீங்கள் பழக வேண்டும். பயிற்சியிலேயே வேறுபாடு காட்டுவார்கள். பெற்றோர் நெருக்கடி, புதிய சூழல், தோற்று விடுவோமோ என்கிற பயம் இவையெல்லாம் சேர்ந்து, மாணவர்களை தற்கொலை முடிவை எடுக்க வைத்து விடுகிறது.

பயிற்சி மையங்கள் முறையான வரியும் கட்டுவதில்லை. கடந்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட கோட்டா நகர பயிற்சி மையங்களில், வருமான வரித்துறை மிகப் பெரிய ஆய்வை நடத்தியது. அதில், ரூ.100 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்பட்டது. 

வட மாநிலங்கள் போலவே, தமிழகத்திலும் நீட் தேர்வு மையங்கள் முளைக்க ஆரம்பள்ளன. விளம்பரங்கள் வெளியிட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசைகளைத் தூண்டத் தொடங்கியுள்ளன என்பதுதான் அண்மைக்கால அபாயம். 

மொத்தத்தில் குற்றத்தின் ஊற்றுக்கண்ணாக அச்சுறுத்தி வருகின்றன இந்திய அரசின் நீட்’டும் மாநில அரசின் டாஸ்மாக்கும்! டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம்; நீட்’டில் யாருக்கோ

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,287.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.