Show all

மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் பெரியாரியக் கொள்கையாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அனைத்து ஆதிக்கப்பாடுகளிலும், ஒன்றிய பாஜக ஆட்சி ஈடுபட்டு வருவதாக பெரியாரிய கொள்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் ஒரு படிநிலையாகவே விடுதலைச் சிறுத்தைகளின் இன்றைய போராட்டம் உருவகிக்கப் படுகிறது.

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பெண்களை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு வீர முழக்கமிட்டார்.

பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் நூலைத் தடை செய்ய வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதுபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பெண்களை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. மனுஸ்மிருதி நூல் மனிதகுல விரோத கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆதிக்கவாத சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய ஆதிக்கவாதிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன.

இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாக விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ளவர்களின் கடமையாகும் என்று தெரிவித்தும், மனுநூலைத் தடைசெய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

இதில் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் தமிழாதன், மாநில நிர்வாகிகள் அரசு, தங்கதுரை மற்றும் தோழமை கட்சிகள் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, பெரியார் திராவிட கழகத்தின் கழக கருத்துப்பரப்புதல் செயலாளர் விடுதலைஅரசு, மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார், திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தில் மாவட்டத்தலைவர் ஆரோக்கியராஜ், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிலவழகன், மக்கள் அதிகாரம் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் ஜீவா, சரவணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகள் வழக்கறிஞர் சுபாசதீஷ், சந்தனமொழி, கனியமுதன், பொன்.முருகேசன், அல்பர்ட் ராஜ், வழக்கறிஞர் பழனியப்பன், சிறுத்தை சிவா, முசிறி ஏகலைவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு வரை, இந்தியாவை ஆண்ட 500க்கு மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகளில், மேல்சாதி மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனுஸ்மிருதி அடிப்படையிலேயே பெரும்பாலும் தீர்ப்புகள் வழங்கி மேல்சாதியினர் போற்றிக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்நூலை பின்பற்றியே சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் இரஜபுத்திரர்கள் ஆட்சிகாலத்தில் தான் இந்த மனுஸ்மிருதி மிகுந்த செல்வாக்கு பெற்றது. 

மீண்டும் இரஜபுத்திரர்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் இன் கொள்கை என்பதாக பெரியாரிய கொள்கையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.