Show all

திமுக ஆர்ப்பாட்டம்! 7.5விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து

மருத்துவக் கனி கனவுக்கு ஆப்பு அடிக்கும் நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பூத்த குறிஞ்சி மலர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக ஆர்ப்பாட்டம்

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஒப்புதல் வழங்க கோரி கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவு, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஒரு கிழமை ஒரு நாள் கடந்து விட்டது. இந்த சட்டவரைவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்த சட்டவரைவுக்கு மேலும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

இந்நிலையில், சட்டவரைவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும் ஆளுநருக்கு அடங்கிப்போவதாக தமிழக அரசைக் கண்டித்தும், கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில், கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.