Show all

வீழ்ந்தது பாஜகவின் அடுத்த அடாவடி! அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய ஆணவம்.

பாஜக நடுவண் அரசு அடுத்த அடாவடியாக, அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய நிலையில்,  தேர்வு முடிவுகளை வெளியிட, மதுரைக் கிளை உயர்அறங்கூற்று மன்றம் தடை விதித்தது. அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தியதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசின் அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் அலுவலர் மற்றும் அஞ்சல் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

பள்ளி இறுதி வகுப்பு  மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது சிரமம். எனவே, இந்த தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், பழைய அறிவிப்பின் படி தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என கோரி மதுரை உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் மனு செய்யப்பட்டது.

மதுரை உயர் அறங்கூற்றுமன்றக் கிளை இந்த வழக்கை கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அறங்கூற்றுவர்கள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு தங்களது இல்லத்தில் வைத்து வழக்கை விசாரணை செய்தது. முடிவில், அஞ்சல்துறை தேர்வை ஞாயிற்றுக் கிழமை நடத்தலாம். ஆனால், இந்த அறங்கூற்றுமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து நடுவண் அரசு வருகிற வெள்ளிக் கிழமைக்குள் பதில் மனு பதிகை செய்ய வேண்டும் என்றும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஆங்கிலம், ஹிந்தியில் தேர்வுகள் நடைபெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற மேலவையில் தமிழக பாராறுமன்ற உறுப்பினர்கள்; இன்று அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,215.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.