12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் பிரகடனம் செய்தது. ரேபரேலி மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை எதிர்த்து சோசலிஷ்ட் கட்சி தலைவர் ராஜ்நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்றம் 29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5077 அன்று (12.06.1975) இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் இந்திரா காந்தி தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் அன்றைய மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையின்படி 11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5077 அன்று (25.06.1975) நள்ளிரவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய இதே நாளில் அன்று அதிகாலை முதல் இது நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 21 மாதங்கள் அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்தது. இந்த அவசரநிலைப் பிரகடனத்தை நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், காமராஜர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி என நாட்டின் அத்தனை தலைவர்களும் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்தனர். இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது. ஆனாலும் அவசரநிலை பிரகடனத்தை திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது. ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்தது. எமர்ஜென்சியை காமராஜர் மிகக் கடுமையாக விமர்சித்தார். திமுக மீது கடும் கோபத்தில் இருந்த இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார். இதையடுத்து திமுகவின் மூத்த தலைவர்கள் முரசொலி மாறன், வைகோ, துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். ஸ்டாலினைக் காப்பாற்ற அடிகளைத் தாங்கிய சென்னையின் முன்னாள் மேயர் சிட்டிபாபு மரணித்துப் போனார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்தது. திரைப்பட நடிகை சினேகலதா ரெட்டி மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். பரோலில் வெளியேவந்த நிலையில் சிறைக் கொடுமைகளால் மரணமடைந்து போனார். இப்படி எண்ணற்ற துயரம் தோய்ந்த நாட்களைக் கொண்டதாகத்தான் அவசர நிலை பிரகடனம் இருந்தது. இருபத்தியோரு மாதங்களுக்குப் பிறகு அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வந்தது. இதற்கு பிந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர். அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள். பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.58 கோடி பழைய ரூபாய் தாள்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் இயக்குனராக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளார். எனவே, இவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணைக்கு யார் உத்தரவிடுவார்? அறங்கூற்றுத்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். என்று தெளிவு படுத்துகிறார் யஷ்வந்த் சின்கா- முன்னாள் இந்திய நிதியமைச்சராக தலைமை அமைச்சர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், வெளியுறவு அமைச்சர் ஆக அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



