12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவர் ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அவர்கள், மருத்துவரின் சமூக நீதி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: அரசியலுக்கும், சமூக சேவைக்கும் தேவையான அடக்கமும், பக்குவமும் இல்லாமல் கருத்து என்ற பெயரில் கத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வித்தியாசமாக கத்தியிருக்கிறார். அது பெரும்பான்மை சமுதாயத்தின் செவிகளை கிழித்து மனங்களைக் காயப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய தமிழிசை சவுந்தரராஜனிடம் சென்னை- சேலம் பசுமை சாலைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து வினா எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கம் போலவே மக்களை சமூக விரோதிகளாக அவர் சித்திரித்துக்கொண்டிருந்தார். அடுத்து, ஏற்கெனவே சேலத்துக்குச் செல்ல இரு சாலைகள் உள்ள நிலையில், இத்திட்டம் தேவையா என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே? எனச் செய்தியாளர் வினா எழுப்பியபோது அதற்கான பதில் தமிழிசையிடம் இல்லை. அதனால் குரூர சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கடைநிலையில் இருந்த பாட்டாளி மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சில கருத்துகளை உதிர்த்து திருப்தியடைந்திருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜனின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது; இது அவரை அடையாளப்படுத்தியுள்ளது. சில நேரங்களில் காற்று செய்யும் தவறுகளால் மேலே அடித்துச் செல்லப்படும் பொருள்களில் சில தங்களுக்கு இறகு முளைத்து விட்டதாகவும், தாங்கள் பறந்து கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்துகொள்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர்களுக்கு தாங்கள் யார்? என்பதும், மற்றவர்களின் மதிப்பு என்ன? என்பதும் மறந்து போயிருக்கும். காற்றின் வேகத்தில் தாங்கள் ஏற்கெனவே இருந்த இடத்தைவிட மோசமான இடத்தில் வீசியடிக்கப்படும்போதுதான் அவற்றுக்கு தங்களைப் பற்றிய நினைவுகள் வரும். அதேபோன்று பறப்பதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் வெறுப்பு வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். 'அய்யோ பாவம் தமிழிசை... அவருக்கு வரலாறு தெரியாது. விட்டுத்தள்ளுங்கள்' என்று ராமதாஸ் அவர்கள் கூறிவிட்ட போதிலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள பாட்டாளி மக்கள் தயாராக இல்லை. சமூக நீதிக்காக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயம் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கொந்தளித்துக்கொண்டுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்குப் புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதைத்தலைவர் ராமதாஸ். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப்போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, ராமதாஸ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத்தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக்கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப்பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராமதாஸ் சொந்த சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் ராமதாஸிடமிருந்துதான் வெளிப்படும். 108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும் வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாட்டாளி மக்களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். என்ன பேசலாம்? என்ன பேசக் கூடாது? என்கிற நாகரிகமே இல்லாமல் பேசுவதே- தமிழக பாஜகவினருக்கு வாடிக்கையாகி விட்டது. இது எங்கே கொண்டு போய் விடப் போகிறது? எப்போது முடியப் போகிறது? எப்படி முடியப் போகிறது என்றே தெரியாமல் தமிழக மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



