02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற நாளிலிருந்து, இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளிலும் இலஞ்சம் ஊழல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இது அந்தந்தத் துறைகளின் அடிமட்ட வேலையாள் தொடங்கி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும், அந்தத் துறை அமைச்சர் வரை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது. இதில் இலஞ்சம் வாங்காதவர்கள் என்று அடிமட்ட வேலையாளில் இருந்து உயர் மட்ட அதிகாரிகள், அந்தத் துறை அமைச்சர் வரை ஒரு பட்டியலும் இருந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் அவர்கள் பெயராலும் இலஞ்சம் வாங்கப் பட்டு விடும் இந்த இலஞ்சம் வாங்காதவர்கள் நல்லவர்களேயன்றி வல்லவர்கள் அல்லர். எனக்கு வேண்டாம் வம்பு என்றும், எனக்கு வேண்டாம் ஊரார் பாவம் என்றும், நான் நேர்மையாக இருப்பேன் என்று இலட்சிய நோக்கிலும், இலஞ்சம் வாங்காதவர்களை வகை படுத்தலாம். இவர்கள் அடுத்தவர்கள் வாங்கும் இலஞ்சத்தைத் தட்டிக் கேட்பது, பொறாமைப் படுவது, போட்டுக் கொடுப்பது என்றெல்லாம் ஈடுபடுவதில்லை. இந்த இலஞ்சம் வாங்குகிறவர்களை காட்டிக் கொடுப்பதும், பொறாமைப் படுவதும், போட்டுக் கொடுப்பதும் இலஞ்சம் வாங்குகிறவர்கள்தாம் மேற்கொள்கின்றனர். அடிமட்ட வேலையாளில் இருந்து அமைச்சர் வரை தனக்கு கீழ் இருப்பவர்கள் தனக்கு மேலாக வளரும் போது இது நிகழும். அரசியல் கட்சிகள் குறிப்பாக நடுவண் அரசில் இருக்கும் அரசியல் கட்சிகள் மாநிலக் கட்சிகளை தங்கள் விருப்பம் போல் நடத்த அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவார்கள். குறிப்பாக வணிக வரித்துறையை ஏவி சோதனை நடத்துவார்கள். வாதம் வழக்கு வம்புகள் எல்லாம் பேரங்களின் அடிப்படையில் முடித்துக் கொள்ளப் படும். இதை வைத்து ஊடகங்கள் மோடிவித்தை, பார்விளையாட்டு, விலங்கு காட்சிகள் சர்கஸ் எல்லாம் நடத்துவார்கள். அப்படியான மோடிவித்தை, பார்விளையாட்டு, விலங்கு காட்சிகள் சர்கஸ் எல்லாம் ஊடகங்கள் நடத்துவதற்கு- பாஜக நடுவண் அரசு தமிழக ஆளும் அதிமுக மீது வருமான வரிச் சோதனையை முன்னெடுத்திருக்கிறது. நாம் கைத்தட்டி ரசித்து விட்டு அப்புறம் மறந்து விடுவோமா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான சுப்பிரமணியை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைத்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மற்றொரு சம்பந்தி முறை ஆகிய என்.ஆர்.கன்ஸ்டக்ரஷன்ஸ் ராமலிங்கம் குடும்பம் ஈரோட்டில் உள்ளது. ராமலிங்கம் மற்றும் சுப்பிரமணி இவர்களுக்கு சொந்தமான கட்டுமான தொழில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா என தென்மாநிலங்களில் செயல்படுகிறது. தற்போது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சங்கிலி தொடர் போல எடப்பாடியின் சம்பந்தியான சுப்பிரமணி மற்றும் ராமலிங்கம் ஆகியோரின் நிறுவனங்களும் இணைந்துள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சுப்பிரமணியையும் ராமலிங்கத்தையும் தனித்தனியாக தூக்கிக்கொண்டு போய் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில்: கடந்த 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் தொடர்ந்து தற்போதும் நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி வசமே உள்ளது. ஆக, 7 ஆண்டுகளும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் பெரும்பாலும் செய்யாதுரை வசமே சென்றுள்ளது. இதில், எடப்பாடியின் சம்பந்திகளான சுப்பிரணி, ராமலிங்கத்தின் இணைவு இருந்துள்ளது. இதைத் தோண்டி துருவிய வருமான வரித்துறை மொத்தமாக இந்த துறையில் 4500 கோடி முறைகேடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். தற்போது செய்யாதுரையிடம் 173 கோடி ரூபாய்தாளாகவும் 214 கிலோ தங்கமாகவும் கைப்பற்றியதோடு அசையா சொத்துக்கள் பட்டியலையும் கைப்பற்றியுள்ளனர். செய்யாதுரையிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சுப்பிரமணி, ராமலிங்கத்திடம் ரூபாய்தாளாக மட்டும் 1340 கோடி இருப்பதாக தெரியவந்துள்ளது. இது எங்கே உள்ளது? இதனுடைய பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரணையை தொடரும் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த தகவலையும் நடுவண் அரசுக்கு இன்று கொடுத்துள்ளார்கள். இதன் பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மொத்தமாக நடுவண் மோடி அரசிடம் சிக்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாகத்தான் அவரது இன்றைய செயல்பாடு நடுவண் அரசை எதிர்ப்பது போல ஒரு தோரணையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையி;ல் கணக்கில் வராத 1340 கோடியையும் அப்படியே கமுக்கமாக வைத்திருப்பதற்கான வேலைகளும் நடை பெற்று வருகிறது. அரசியல் ரீதியாக எடப்பாடியின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக இந்த சோதனையும் அதனை தொடர்ந்த நடவடிக்கைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



