Show all

பாஜக அமைச்சரின் காரில் 91 லட்சம் பறிமுதல்

மகராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் காரில் இருந்து 91 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு நடுவண் அரசு கடந்த 8-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் இந்த மாத இறுதிவரை செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கில் காட்டாத கருப்புப்பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையினரிடம் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கருப்பு பணம் வைத்திருக்கும்பண முதலைகள் பலர் அந்தப் பணத்தை வேறு வழிகளில் வௌ;ளைப் பணமாக மாற்ற முயற்சித்து அதற்கான நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக நாடு முழுவதும் வாகன சோதனைகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, அம்மாநில பாஜக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சரான சுபாஷ் தேஷ்முக் என்பவருக்கு சொந்தமான வணிக நிறுவனத்திற்;கு சொந்தமான வாகனத்தில் இருந்து சுமார் 91 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரிக்கப்பட்டதில் சரியான ஆவணங்கள் எதையும் அவர் வழங்கவில்லை, இதனையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுறித்து 24 நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமைச்சரின் வணிக நிறுவனமான லோக்மங்கலுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அதிரடி கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக அமைச்சரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைத்து மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாஜக அமைச்சர் சுபாஷ் தேஷ்முக், கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயற்சித்ததாக, அம்மாநில எதிர்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு சொந்தமான காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அந்தப் பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார். எனினும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேலவை உறுப்பினருமான தனஞ்சய் முண்டே, இச்சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதால் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.