Show all

2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தியவர்கள் கலக்கத்தில்

வங்கிகளில் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டி பணத்தை செலுத்தியவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கால்கடுக்க காத்திருந்து மக்கள் பணத்தை மாற்றினர். ஒரே நபர் பலமுறை பணம் மாற்றுவதாக கருதி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதில் செக் வைத்தது. அதாவது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்தது. அடுத்து 4,500 ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சவரம்பு தொகை 2000 ரூபாய் என்று குறைக்கப்பட்டது. மேலும், வங்கிகள், மை இல்லாமல் யாருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பல வங்கிகளுக்கு மை வராததால் அவர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கவில்லை. இதன்காரணமாக வங்கிக்கு சென்று மக்கள் ஏமாந்தனர். இதையடுத்து வங்கி கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்திட வாடிக்கையாளர்களை வங்கி அறிவுறுத்தியது. அதன்பேரில் மக்கள், கடந்த மூன்று தினங்களாக வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்தி வருகின்றனர். இதில் வருமானவரி உச்சவரம்பிற்கு மேல் தொகை செலுத்துபவர்களை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தியவர்களின் பட்டியலை தயாரித்த வருமானவரித்துறை அவர்களுக்கு வருமானத்துக்கான ஆதாரத்தையும் அதன் விளக்கத்தையும் சமர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணம் செலுத்தினால் கட்டாயம் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். அதன்படி பழைய ரூபாய் நோட்டுக்களில் 49 ஆயிரத்துக்கு மேல் செலுத்;தியவர்களின் பான் கார்டுகளை ஆய்வு செய்தோம். இந்த மாதத்தில் வருமான வரி உச்ச வரம்பிற்கு மேல் பணத்தை செலுத்தியவர்களின் பான் கார்டு விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. நோட்டீஸில் அவர்கள் செலுத்திய பண விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் உரிய வருமான ஆதாரங்களையும், கடந்த 2 ஆண்டுகளாக வருமானவரி தாக்கல் செய்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கவில்லை என்றால் செலுத்திய பணத்துக்கு 200 சதவிகிதம் அபராதமும் பிடிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணத்தை மீட்கவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றனர். இந்த மாதத்தில் மட்டும் அதிகளவில் பணம் செலுத்திய விவரங்களையும் வருமானவரித்துறை சேகரித்து வருகிறது. அவர்களுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்றார் வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவர். வருமானவரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.