Show all

அதிகாலை அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் நடிகை சித்ரா தற்கொலை

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த உணவக அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியின், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற குடும்பப் பாங்கான, அறிவார்ந்த, பாசம்மிகுந்த, பண்பாடான வேடத்தில் நடித்ததன் மூலம் மாபெரும்  புகழடைந்தவர் சித்ரா. இவர் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராவார்.

புற நகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றதால், தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு மின்மினி உணவகத்தில் தங்கியிருந்தார் சித்ரா. அந்த உணவக அறையில்தான் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்றாடம் திருவான்மியூர் சென்று வந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்பதால் மின்மினி உணவகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

28 அகவை சித்ராவுக்கு, 4 மாதங்கள் முன்பு, ஹேமந்த் என்பவருடன் திருமணம் உறுதியாகியிருந்தது. அவரும் இதே உணவகத்தில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு உணவகத்திற்குத் திரும்பியுள்ளார் சித்ரா.

அப்போது தான் குளிக்கப்போவதாகவும், எனவே நீங்கள் வெளியே நில்லுங்கள் என்றும் ஹேமந்திடம், சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து ஹேம்நாத் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. கதவை தட்டிப் பார்த்தும், பதில் வரவில்லை.

எனவே அதிர்ச்சியடைந்த ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அப்போதுதான் அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் காவல்துறையினர் சென்று சித்ரா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் என்று இதுவரை கிடைத்த செய்திகள் மூலம் தெரியவருகிறது.
 
ஆனாலும், உணவக நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், சேதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர் சார்ந்த துறையில் இருந்து கொடுக்கப்பட்ட வேறு ஏதும் அழுத்தங்கள் இந்த தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.