Show all

இந்தியக் குடிஅரசு தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார்! டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடிஅரசு தலைவரைச் சந்தித்து முறையிட்டனர்.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடிஅரசு தலைவரைச் சந்தித்து முறையிட்டனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து மத வேறுபாடுகளினால் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அரசு இயற்றியுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது. டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று மாணவர்கள் மற்றும் காவல்துறையினரிடையே ஏற்பட்ட மோதலில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதல் அடாவடி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் குடிஅரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்தனர். இந்த நடத்தைகளின் மீது நியாய விசாரணை நடத்தப்பட வேண்டும் என குடிஅரசு தலைவரிடம் அவர்கள் முறையிட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.