Show all

நல்ல காலம் பார்க்கப் போனவர்களைத் தொற்றியது கெட்ட காலம்! சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா. கிரண்பேடி தகவல்

சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள காணொளிப் பதிவில், காரைக்காலில் ஒரு கைரேகை சோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரின் அறியாமையால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று படையல் (பிரசாதம்) வழங்கியுள்ளார். இறுதியாக அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரைச் சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகிவிட்டார்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் கடுமையான பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் வழியாக தொடர்பு தடம் அறிந்ததில், அனைவரும் சிறிய மதுபான விருந்துகளிலோ அல்லது சில வீடுகளில் நடந்த சிறிய பொதுவான விருந்துகளிலோ பங்கேற்றது தெரியவந்துள்ளது என்று கிரண்பேடி தெரிவித்தார்.

ஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கொரோனா பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அந்தத் தொழிற்சாலையின் மேலாளர்களைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும், இதைப் பின்பற்றவில்லை எனில் அவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என்றும் கூறிய கிரண்பேடி, ஒரு முகக்கவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது என்று எச்சரித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.