முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில், ‘நான் இப்போது பேசியாக வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் சீர்குலைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக பொருளாகி விடும் என்றும் குறிப்பிட்டார். யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்கு, பிகார் மாநில பாஜக பாரளுமன்ற உறுப்பினரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹா, சிவசேனாவின் சாம்னா இதழ், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது கீச்சு பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை மேற்கோள் காட்டி மோடி அரசை விமரிசித்திருந்தார். இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி நேற்று நக்கல் அடித்தார். அதாவது யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் நடுவண் அமைச்சராக இருப்பது சரியாக இல்லை போலும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி 80 அகவையில் அவர் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் என்றார். என்று யஷ்வந்த் சின்ஹாவை கிண்டலடித்திருந்தார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்றும் அருண்ஜேட்லி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அருண் ஜேட்லியின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார். நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அருண் ஜேட்லி அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது என கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



