Show all

பாராட்டுவோம் ஜெகனை! 75 விழுக்காடு வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கே ஒதுக்கும் சட்டம்; சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். 

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வொய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது. புதிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். 

இந்தச் சட்டத்தின் படி தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், தனியார் மற்றும் அரசு கூட்டு நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பை, உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்குகிறார்கள். 

இந்தப் புதிய சட்டப் படி ஒரு நிறுவனம், தனக்கு தேவையான அல்லது தகுதியான உள்ளூர் இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்றால், உள்ளூர் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, அவர்களை பணியமர்த்த வேண்டும். எந்த சாக்கு போக்கும் சொல்லி வேறு நபர்களை பணிக்கு அமர்த்த முடியாதாம். இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலையை, தனியார் நிறுவனங்கள் அரசோடு சேர்ந்து செய்ய வேண்டுமாம். 

இந்தச் சட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் தொழிற்துறையினரிடம் கலந்து பேசி சம்மதிக்க வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் எனச் சொல்லி இருக்கிறது ஆந்திர அரசு. 

இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் இதை முன்னெடுக்க வேண்டும். மாநில அரசுகள் மட்டுமல்ல நடுவண் அரசும் இதை இந்தியா முழுவதும் முன்னெடுத்தால் மக்களாட்சி தத்துவம் பொருளுடையதாக போற்றிக் கொள்ளப் படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,222.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.