குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். அந்தக் குடியுரிமை வழங்கல் இலங்கை தமிழர்களுக்கு அன்று. தோட்டத்தொழிலுக்குப் போய் திரும்பிய இந்தியத் தமிழர்களுக்கே என்று தெரியவருகிறது. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட முன்வரைவு பதிகை செய்யப்பட்டபோது, திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க முடியாத வகையில் சட்டமுன்வரைவு இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்சா, ‘பல உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. இருந்தாலும், வைகோ, திருச்சி சிவா போன்றவர்கள் இது குறித்துக் கேட்டார்கள். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து, இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. பல கட்சிகள் இதைச் செய்திருக்கின்றன. முதலில் 4,61,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பிறகு, 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் 75 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 75 ஆயிரம் பேர் இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளப்பட்டார்கள். இரண்டு லட்சத்து 16 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள். ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சொல்வதைப்போல உண்மையில் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில். அமித்சா இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களையும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள். “ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு மலையகத் தமிழர்கள் நாடு திரும்பியதைத்தான் அமித்சா குறிப்பிடுகிறார்" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர். பிரித்தானியர் ஆளுமை இலங்iயில், இருந்த காடுகளை அழித்து காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்க இலங்கையில் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், அருகிலிருந்த தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அழைத்துச் செல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்கள் காபி, தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்தனர். இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் கிட்டத்தட்ட 10 விழுக்காடாக உயர்ந்தனர். இந்த நிலையில், தமிழ் தொடராண்டு 5041ல் (ஆங்கிலம்-1939) இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்புவதை இந்திய அரசு தடை செய்தது. இருந்தபோதும், அதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப தொடங்கியிருந்தனர். இந்திய அரசு (பிரித்தானிய இந்தியா) தடைக்காலம் வரை மொத்தமாக 64,704 பேர் நாடு திரும்பினர். ஆனால், இலங்கைக்குச் சென்ற தொழிலாளர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், நாடு திரும்பிய தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காட்டிற்கும் குறைவு. அதற்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற பிறகும் பலமுறை பலகாரணங்களால் இலங்கை தோட்டத் தொழிலாள இந்தியத் தமிழர்கள் இந்தியா திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியுரிமை பெற்ற கதையைத்தான்- தமிழர் தொடர்பான இலங்கை இந்திய வரலாறு தெரியாமல் அமித்சா குழப்பியிருக்கிறார் என்று தெளிவாகத் தெரியவருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



