கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த மாதத்திற்கான ஊரடங்கில் தடைகள் தொடர்கின்றன. தளர்வுகள் பெரிதாக எதுவும் இல்லை. 15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதமும் தொடர்கிறது தமிழகத்தில் ஊரடங்கு. கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் அடுத்த மாதத்திற்கான ஊரடங்கில் தடைகளும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்த மாதத்திற்கு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். மெட்ரோ தொடர்வண்டி, பயணிகள் தொடர்வண்டி, விமானப் போக்குவரத்துக்கு முதலியவற்றுக்கான தடை தொடர்கிறது. பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க மின் அனுமதி நடைமுறை தொடரும். காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. முன்னதாக காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் ஏற்கெனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. எதிர்வரும் விடுதலை நாள் நடுவண் அரசின் வழிகாட்டுதல்படி கொண்டாடப்படும். தற்போது 50விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் 75விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம். அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகளிலும், சிறிய தேவாலயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இன்றி கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும், வணிக வளாகங்கள், திரையரங்குகளுக்கும் தடை தொடர்கிறது. தங்கும் உணவக விடுதிகள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், குடிப்பகங்கள் முதலியவற்றுக்கு புதிய ஊரடங்கிலும் தடை தொடர்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



