23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனர். தாலிகஞ்ச் சந்தையில் உலர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்தவரை காவி உடை அணிந்த சிலர் தாக்கினர். திடீரென வன்முறையில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து சில அடிகளை வாங்கிய பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அடுத்ததாக மற்றொரு காஷ்மீர் வியாபாரியை நெருங்கிய அந்தக் கும்பல் அவரையும் தாக்கியது. அதற்குள் அக்கம் பக்க கடைக்காரர்கள் வந்து அவர்களைத் தடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஹிந்தி நடிகை ரவீனா டண்டனும் கீச்சுப் பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் விரைந்து கைது செய்தமைக்கு பாராட்டு தெரிவித்தார். அதில், 'இவரைப் போன்றோர் வெளியில் நடமாடக்கூடாது. சிறையில் அடைத்ததோடு சாவியைத் தூக்கி எறிந்து விடுங்கள். தாக்குதலில் ஈடுபட்டபோது அவர் அணிந்திருந்த அந்த காவி நிற உடையை அவரிடம் கொடுத்து சிறைச்சாலையை துடைக்க வையுங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த உ.பி. காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு' எனப் பதிவிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாதிகள் காரணம் என்று கூறப்பட்டு, அபினந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி விடுதலை ஆனது வரை எத்தனையோ நடந்து விட்டாலும், காஷ்மிரிகள் இந்த புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியாவில் பதினோறு மாநிலங்களில் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடந்ததும், உச்ச அறங்கூற்று மன்றம் கண்டனம் தெரிவித்ததோடு பதினோரு மாநில அரசுகள் காஷ்மீரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்ததும் தனிக்கதை. அவற்றையெல்லாம் தாண்டி தொடர்ந்து மோற்கொள்ளப் படுகிற காவிகளின் காஷ்மீர் வியாபாரிகள் மீதான பலிவாங்குதலும், உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு தலைவணங்கி இந்த உடனடி கைதும், கைதுக்கான பாராட்டும்! வெளங்கிடும் இந்தியா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



